புதுவை ஜிப்மரில் திமுகவினர் முற்றுகை போராட்டம்: 4 எம்எல்ஏ.,க்கள் கைது

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பதைக் கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டம் நடத்தியதில் 4 எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி மாநிலம், கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் ஜிப்மரில் அனைத்து கோப்புகள், பதிவேடுகள் மற்றும் தலைப்புகளில் இந்தி கட்டாயம் என்று ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டிருந்தார். இதனை கண்டித்து திமுக சார்பில் இன்று ஜிப்மர் மருத்துவமனை எதிரே முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவை தலைவர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். ஜிப்மரில் ஹிந்தி திணிப்பு உத்தரவை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். ஜிப்மர் பிரதான வாயிலை நோக்கி திமுகவினர் முன்னேறிச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக-வில் ஒரு பிரிவினர் தடுப்புகளைத் தள்ளிவிட்டனர். இதனால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அவர்களையும் போலீஸார் முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின்பேரில் திமுக எம்எல்ஏக்கள் நால்வர் உட்பட நூற்றுக்கணக்கானரை போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில் "உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு ஆர்எஸ்எஸ் நபரை ஜிப்மர் இயக்குநராக நியமித்ததால், அவர் இந்த மண்ணின் மக்களுடைய மனநிலையையும், தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்துவம் வகையில் இந்தியை திணிக்கக் கூடிய ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ரங்கசாமி வாய்த்திறந்து தன்னுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜிப்மர் இயக்குநர் தனது அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால், தலைமை கழகத்தின் அனுமதி பெற்று, ஜிப்மர் இயக்குனரின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்துவோம். ஜிப்மருக்கு இயக்குநராக ராகேஷ் அகர்வால் வந்த பிறகு 83 வகையான மருந்துகள் வாங்காமல் விட்டுள்ளனர். பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் கூட கையுறையை அவர்களே வாங்கி வருமாறு கூறுகிறார்கள். ஆர்த்தோ (எலும்பு சிகிச்சை) நோயாளிகளிடம் கூட வெளியே சென்று பிளேட் வாங்கி வருமாறு சொல்கிறார்கள். எல்லா மருந்துகளையும் வெளியே வாங்கி கொள்ளுமாறு கூறுகிறார்கள்.

800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அப்பணிகளுக்கு தனியார் மூலம் ஆட்களை வைத்து பல லட்சம் கையூட்டு பெற்றுள்ளார்கள். தற்போது கூட நேரடி நியமனங்கள் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பியுள்ளார்கள். அதில் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை. இவ்வளவு அராஜகமாக செயல்படும் துணிச்சலை இயக்குநருக்கு பாஜக கொடுத்துள்ளது. அதை நாங்கள் முறியடிப்போம்" என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 mins ago

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்