அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு வரவேற்பு

By கல்யாணசுந்தரம்

திருச்சி: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் என கல்வியாளர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி செய்தி வெளியானது. கல்வியாளர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவிப்பதோடு, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஓய்வு பெற்ற முதல்வருமான சி.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களும் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விடுவதால் குழந்தைகள் காலை உணவை சரியாக உட்கொள்ளாமலேயே பள்ளிக்கு வந்து விடுகின்றனர். இதனால், பள்ளியில் பாடத்தில் அவர்கள் கவனம் செலுத்த முடியாமலும், சோர்வுடனும் காணப்படுகின்றனர்.

இதைப் போக்க திருச்சியில் 2007-ல் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்போடு சமுதாய காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு ஏறத்தாழ 25 பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்போதும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்து அனைத்துப் பள்ளிகளிலும் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக தமிழக அரசு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

இதுகுறித்து அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன் கூறுகையில், தமிழக அரசின் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. தொடக்கப்பள்ளிகள் தவிர்த்து தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு, 1 முதல் 10-ம் வகுப்பு, 1 முதல் பிளஸ் 2 என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏராளமாக உள்ளன.

மாணவர்களுக்கு ஏக்கம் ஏற்படும்

இந்த பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கும் போது, அதே பள்ளியில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இது மனரீதியான ஏக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதை கவனத்தில் கொண்டு உரிய மாற்றங்களை செய்ய வேண்டும். இத்திட்டத்தில் அரசு பள்ளிகளுடன் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்