கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இளைஞரின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து உயிரூட்டிய மருத்துவர்கள்

By க.சக்திவேல்

கோவை: அரிவாளால் வெட்டப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையை அறுவை சிகிச்சை செய்து இணைத்து மருத்துவர்கள் மீண்டும் உயிரூட்டியுள்ளனர்.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் (21) திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேசை அரிவாளால் கடந்த 8-ம் தேதி வெட்டியுள்ளார். இதில் முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு, வலது கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அப்போது, அதிக காயங்களால் ரத்த இழப்பு ஏற்பட்டிருந்துள்ளது. துண்டிக்கப்பட்ட கை பகுதியை சுத்தமான ஈரத்துணியில் சுற்றி, பிளாஸ்டிக் பையில் வைத்துத் கட்டி, அதனை ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து, கைப்பகுதி நேரடியாக ஐஸ் கட்டியில் படாதவாறு பாதுகாத்து எடுத்துவந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், துண்டிக்கப்பட்ட கை பகுதியை இணைக்க முடிவு செய்து, அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக கையை இணைத்தனர்.

இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, “கணேசுக்கு ரத்தம் செலுத்தப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, கடந்த 8-ம் தேதி காலை 8 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சிகிச்சையில் எலும்புகள், தசை நரம்புகள், ரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட கைக்கு உயிரூட்டப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 22 நாட்கள் கடந்த நிலையில் அந்த இளைஞர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்ட பகுதியில் தற்போது ரத்த ஓட்டம் உள்ளது. மருத்துவமனையில் உள்ள அவருக்கு வரும் நாட்களில் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன்பிறகு, கிட்டத்தட்ட இயல்பாக உள்ள கையைப் போன்றே அவரது கையின் செயல்பாடும் வந்துவிடும். பல லட்சம் செலவுடைய, இந்த உயர்தர அறுவைசிகிச்சையை பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் வி.பி.ரமணன், மருத்துவர்கள் ஆர்.செந்தில்குமார், எஸ்.பிரகாஷ், ஏ.கவிதாபிரியா, எஸ்.சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் சதீஷ் உள்ளிட்டோர் வெற்றிகரமாக செய்துள்ளனர். இவ்வாறு துண்டிக்கப்பட்ட பகுதியை மீண்டும் இணைத்து உயிரூட்டியது கோவை அரசு மருத்துவமனையில் இதுவே முதல்முறையாகும்”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்