அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது: கருணாநிதிக்கு அமைச்சர் தங்கமணி பதில்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிமுக ஆட்சியில்தான் அதிகரித்தது என தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் அறிவிக்கப்பட்டதில், குறைந்த அளவே முதலீடு பெறப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பின், இந்தியாவில் பாதுகாப்பு, வெடிமருந்துத் துறை போன்ற சில துறைகள் தொடர்பானவை தவிர வேறு எந்த தொழிலுக்கும் மத்திய அரசு உரிமம் வழங்குவதில்லை. எனவே தான், மத்திய அரசு தொழில்முனைவோர் அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தது. தொழில்முனைவோர் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. அறிக்கைக்கும் உண்மையில் செயயப்படும் முதலீடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இதே தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையில் கடந்த 2007 முதல் 2010 ஆண்டுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் படி, உத்தேசிக்கப்பட்டதை விட குறைந்த அளவிலேயே முதலீடு பெறப்பட்டுள்ளது. இதை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா?

பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் ஆய்வுப்படி, இந்தியாவில் தொழில் துவங்க உகந்த மூன்று மாநிலங்களில் தமிழகம் உள்ளது. மகாராஷ்டிரா, கார்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தமிழகத்துக்கு கீழ் தான் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டை பொறுத்தவரை கடந்த 2000 முதல் 2011 வரை, 7.3 பில்லியன் அமெரிக்க டாலராகும். ஆனால் ஏப்ரல் 2011 முதல் டிசம்பர் 2015 வரை தமிழகம் பெற்றது 13.94 பில்லியன் அமெரிக்க டாலர். மேலும், தொழிற்சாலைகள் எண்ணிக்கை, தொழிலாளர்கள் எண்ணிக்கை, அடிப்படையிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டைப் பொறுத்தவரை 98 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இதில், ரூ.15 ஆயிரத்து112 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கடந்த ஜனவரியில் முதல்வர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும், 19 நிறுவனங்கள் ரூ.6 ஆயிரத்து 530 கோடியில் தங்கள் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளன. 12 நிறுவனங்கள் ரூ.953 கோடி முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்க தயாராக உள்ளன. இதன் மூலம் 45 நிறுவனங்களில் ரூ.22 ஆயிரத்து 595 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

மேலும், கருணாநிதி தன் கேள்வி -பதில் அறிக்கையில், திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் அதிகம் பெறப்பட்டதாக பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். திமுக ஆட்சியில் செய்யப்பட்ட முதலீடு ரூ.21 ஆயிரத்து 126 கோடி மட்டுமே.

அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர் சந்திப்புக்கு முன்பே 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.31 ஆயிரத்து 706 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் 4 ஆயிரத்து 59 தொழில் நிறுவனங்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 475 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில் தான் அதிகமாக உள்ளது என்பது தெரியவரும்.

எனவே, எந்த புள்ளி விவரங்கள், எதைத் தெரிவிக்கின்றன என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், தமிழக மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அபகரித்துவிடலாம் என திமுக தலைவர் கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது'' என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

16 mins ago

வணிகம்

28 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்