நீட் தேர்வு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு, 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு மற்றும் மருத்துவமனைகள் ஆய்வுக்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா சென் னைக்கு வந்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு விலக்க அளிக்கப்பட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தை செயல்படுத்த அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் குழுவை அமைத்து, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் பணிகளைத் தொடங்க வேண்டும்.

கிராமப்புறங்கள் நிறைந்த ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதியும், நிதியும் அளிக்க வேண்டும்.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும். இதற்கான இடம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கும்.

மாநில அரசின் நிதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான டி.எம். மற்றும் எம்.சிஎச் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை இடங்களில் 50 சதவீதம் இடங்களை, பணியில் இருக்கும் தமிழக மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் பயிற்சி பெறும் வகையில், தமிழகத்தில் உள்ள 7 மாவட்ட தலைமை மருத்துவமனைகளை அங்கீகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் ஒதுக்கீட்டை 20 சதவீதம் உயர்த்த வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள முதுநிலை மருத்துவக் கல்வி வரைவு விதிகளுக்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். இந்த விஷயத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில், மாவட்ட தலைமை மருத்துவமனைகளை உருவாக்க ரூ.950 கோடி நிதிக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்