ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானதும் சிறப்பும் வாய்ந்தது தமிழிசை: பாரதிய வித்யா பவனில் நடைபெறும் தமிழிசை தொடக்க விழாவில் டாக்டர் சுதா சேஷய்யன் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழிசை ஆறாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தமிழ்நாடு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் தமிழிசை விழாவை டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் அவர் பேசியதாவது:

திருமயிலை பாரதிய வித்யா பவனில் நடக்கும் தமிழிசை விழாவில் பங்குபெறவிருக்கும் கலைஞர்களுக்கு வணக்கம். திருமயிலைதொன்மையானது. தமிழிசை அதைக் காட்டிலும் தொன்மையானது. இரண்டும் ஒன்றிணைவது வரலாற்றுப் பெருமை வாய்ந்தது.

திருவள்ளுவரின் `குழல் இனிது’ என்னும் குறளின் மூலம் பல விதமான வாத்தியங்களின் இசை அவர் காலத்திலேயே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இசை குறித்த நூல்கள் தமிழில் இருந்திருக்கும். அத்தனை பாரம்பரியமும் தொன்மையும் வாய்ந்தது தமிழிசை. மிடறு என்பது தொண்டையைக் குறிக்கும். மிடற்றிசை என்பது பாடுவது. யாழ் இசைத்தபடி பாடியவர்கள் பாணர்கள் எனப்பட்டனர். பெரிய யாழ்இசைத்தவர்கள் பெரும் பாணர்கள் ஆனார்கள். யாழ் வைத்துப் பாடும் பாணர்களுக்கு அந்தப் பகுதியில் அதிகம் குடியேறியதால், அரசனால் தானமாக வழங்கப்பட்ட இடமே யாழ்ப்பாணம். இலங்கையின் அரசன் ராவணனின் கொடியில் வீணை இடம்பெற்றிருந்தது. இப்படி பல வரலாற்றுச் சிறப்புகள் தமிழிசைக்கு உள்ளன. இப்படிப்பட்ட தமிழிசைக்கு திருமயிலையில் இன்றைக்கு விழா எடுக்கப்படுகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுரத்துக்கு பக்கத்தில் பூம்பாவையின் சந்நிதி இருக்கிறது. அஸ்திகலசமாக இருந்த அந்தப் பூம்பாவையை எழுப்புவதற்காக பதிகம் பாடினார் ஞானசம்பந்தப் பெருமான். ஏழாம்நூற்றாண்டிலேயே அஸ்திகலசமாக இருந்த ஒரு பெண்ணை ஞானசம்பந்தரின் தமிழிசையால் உயிர்ப்பிக்க முடிந்திருக்கிறது. இதைவிடச்சிறப்பான பெருமை திருமயிலைக்கும் தமிழிசைக்கும் வேறென்ன இருக்க முடியும்?”

இவ்வாறு அவர் பேசினார்.

பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரத்தின் தலைவர் என். ரவி பேசும்போது,

‘‘மருத்துவத் துறையிலும் தமிழ்இலக்கியம், இசை போன்றவற்றிலும் நிபுணத்துவம் மிக்க டாக்டர் சுதா சேஷய்யன் இந்த தமிழிசை விழாவை தொடங்கிவைப்பது மிகவும் பொருத்தமானது.

இசை, மாநிலம், நாடு, மொழிகளை கடந்தது. வாத்திய இசைக்கு மொழி அவசியமில்லை. ஆனால் மொழியின் அர்த்தம் தெரிந்து ஒரு பாடலை ரசிகர்கள் ரசிக்கும் அனுபவம் அலாதியாக இருக்கும். அப்படி ரசிகர்கள் தமிழில் எழுதப்பட்டிருக்கும் பாடல்களை மட்டுமே கொண்டிருக்கும் இந்த தமிழிசை விழா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். 8 நாட்கள் 16 நிகழ்ச்சிகள் இந்த தமிழிசை விழாவில் நடைபெறவிருக்கின்றன.

திருக்குறளை நமக்குத் தந்திருக்கும் தமிழ்த்துறவி திருவள்ளுவர் பிறந்த மண் இது. மயிலாப்பூரிலிருக்கும் கபாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற திருத்தலம்.ஆழ்வார்களின் தமிழும் செழித்தோங்கிய இடம் மயிலாப்பூர். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு ஆண்டில் பாரதிய வித்யாபவனில் தமிழிசை விழா தொடங்குவது பெருமைக்கு உரியது” என்றார்.

பாரதிய வித்யா பவனின் இயக்குநர் கே.என். ராமசுவாமி, “பாரதியவித்யா பவனில் நடக்கும் தமிழிசைவிழா முழுக்க முழுக்க இலவசமாக ரசிகர்களுக்காக நடத்தப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்படி ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்” என்றார்.

தமிழிசை விழா நிகழ்ச்சியை www.bhavanschennai.org என்ற இணையத்தின் வழியாகப் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்