சென்னையில் மீண்டும் கனமழை தொடங்கியது; நாளைக்கும் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த ஒரு மாதமாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று எதிர்பாராத வகையில் பெய்த திடீர் கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று பிற்பகல் 12.20 மணி அளவில் கிழக்கு திசையில் கருமேகங்கள் திரண்டு மாநகரப் பகுதிக்குள் நுழைந்து திடீரென கனமழை கொட்டியது. அப்போது கடும் காற்றும் வீசியது. மாலை வரை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், 4 மணிக்குமேல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.பல்வேறு சுரங்கப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாகச் செல்ல வேண்டிய மாநகரப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழக கடற்கரையை ஒட்டி (5.8 கிலோ மீட்டர்‌ உயரத்தில்‌) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய அதி கனமழையும்‌ பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யும். உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளை கடலோர மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, சென்னை, திருவள்ளூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ மிக கனமழையும் பெய்யும். உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ஜனவரி 2ஆம் தேதி கடலோர மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ஜனவரி 3ஆம் தேதி தென்‌ தமிழ்நாட்டில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ கனமழை முதல்‌ மிக கனமழை பெய்யக்கூடும்‌.

31.12.2021 ,01.01.2022: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. இப்பகுதிகளுக்குச் செல்லும்‌ மீனவர்கள்‌ எச்சரிகையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

44 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்