கோவை ஆவின் பிரத்யேக செயலியில் சேவை குறைபாடு: சீரமைக்க வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை ஆவின் செயலியில் பணப்பரிமாற்றம் செய்தல், புகார் அளித்தல் போன்ற சேவையில் இடையூறுகள் உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம், பேரூர் பச்சாபாளையத்தில் உள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் இதன் விற்பனைப்பிரிவு அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் வழங்கும் உறுப்பினர்கள் 8,200-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் சராசரியாக 1.75 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை ஆவின் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஆவின் கோவை’ என்ற பிரத்யேக செயலியை, ஆவின் பால் பூத் ஏஜென்ட், வாடிக்கையாளர்கள், ஆவின் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீப நாட்களாக ஆவின் செயலி சரிவர இயங்குவதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆவின் வாடிக்கையாளர்கள் கூறியதாவது:

ஆவின் பூத்தில் பால் வாங்குவதற்கு பதிவுஅட்டை அவசியம். தினமும் வாங்கப்படும் பாலின் அளவை இந்த அட்டையில் குறிப்பிட்டு வழங்குவர். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆவின் பால் அட்டை வாங்க ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள விற்பனைப்பிரிவு அலுவலகத்துக்கோ அல்லது உதவி மையங்களுக்கோ நேரில் செல்ல வேண்டும். அங்கு நம்முடைய விவரங்களை பூர்த்திசெய்து புதிய அட்டை வாங்க வேண்டும். அட்டையை புதுப்பிப்பதற்கும் இதே முறைதான். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை தடுக்கவே ஆவின் பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், எவ்வளவு லிட்டர் பால் தேவை என்ற அளவையும், பூத் விவரங்களையும் குறிப்பிட்டு புதிய அட்டையை பதிவு செய்து கொள்ளவோ, புதுப்பித்துக் கொள்ளவோ முடியும். இவ்வாறு பதிவு செய்த புதியஅட்டையை அருகேவுள்ள ஆவின் பூத்துக்கு நேரில் சென்று நாம் பெற்றுக் கொள்ளலாம். பாலுக்கான கட்டணங்களை இந்த செயலி யின் மூலம் வங்கிக்கணக்கில் இருந்தும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அட்டைகள் மூலமும் ஆன்லைன் முறையில் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் சமீப நாட்களாக ஆவின் செயலியில் ஆன்லைன் முறையில் பணத்தை செலுத்த முடிவதில்லை. அதேபோல அருகேயுள்ள ஆவின் பூத்தை தேர்வு செய்யுமாறு செயலியில் காண்பிக்கிறது. ஆனால் வரைபடம் காண்பிப்பதில்லை. இருப்பிடத்தை தானியங்கி முறையில் தேர்வு செய்ய முயற்சித்தால், வேறு மாவட்ட முகவரிகளை காட்டுகிறது. பூத் எண்ணை பதிவிட்டபிறகு அடுத்த பக்கத்துக்கு செல்வதில்லை. செயலியின் நிறை, குறைகளை பதிவிடுவதற்கான வசதியில்லை. இச்செயலியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வாட்ஸ் அப்’ எண்ணில் குறைகளை தெரிவித்தால் எந்த பதிலும் அளிப்பதில்லை. செயலியில் உள்ள சிக்கல்களை தீர்க்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக ஆவின் பொதுமேலாளர் ராமநாதன் கூறும்போது, ‘‘ஆவின் கோவை செயலியில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகார்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இக்குறைகளை, தொழில்நுட்பக்குழு மூலம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்