நெல்லையில் தனியார் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் மரணம்; 3 பேர் பலத்த காயம்: பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், ஒப்பந்ததாரர் கைது

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

திருநெல்வேலி எஸ்.என். ஹைரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தையொட்டி143 ஆண்டுகள் பழமையான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. திருநெல்வேலி சிஎஸ்ஐ டயோஸிசின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாநகரத்திலிருந்து மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இப்பள்ளியில் இன்று காலை 11 மணியளவில் இடைவேளை அளிக்கப்பட்டபோது மாணவர்கள் பலர் கழிவறைக்குச் சென்று திரும்பி கொண்டிருந்தனர்.

கழிவறை சுவர் இடிந்தது:

அப்போது பள்ளி வளாகத்திலுள்ள கழிவறையில் 6 அடிக்கு 5 அடி என்ற அளவிலுள்ள முன்பக்கச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கினர். அவர்களில் திருநெல்வேலி டவுன் பாட்டபத்து குமரன் தெருவை சேர்ந்த 9-வது வகுப்பு மாணவர் கே. அன்பழகன், தச்சநல்லூர் கீழஇலந்தைகுளம் வெள்ளக்கோயில் தெருவை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் டி. விஸ்வரஞ்சன், பழவூர் முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் ஆர். சுதீஸ், தச்சநல்லூர் கணேசன் கோவில் தெருவை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் எஸ். சஞ்சய், டவுண் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெரு 9-ம் வகுப்பு மாணவர் எம். இசக்கி பிரகாஷ், சுத்தமல்லி பாரதி நகர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சேக் அபுபக்கர், கொண்டாநகரம் சம்சு நகரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் அப்துல்லா ஆகிய 7 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.

3 மாணவர்கள் மரணம்:

இச் சம்பவம் குறித்த தகவலை அடுத்து பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 மாணவர்களும் உயிரிழந்தனர். மற்ற 4 மாணவர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் பதற்றம்:
:
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, வருவாய் அலுவலர் பெருமாள், பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மு. அப்துல்வகாப் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அம்மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரனிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, விபத்து நடைபெற்ற பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள கழிவறையில் ஒரு பக்கச் சுவர் எவ்வித அடித்தள கட்டுமானமும் (பேஸ்மென்ட்) இல்லாமல் கட்டப்பட்டிருந்தது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் விரிவான ஆய்வு அறிக்கைக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 48 மணிநேரத்துக்குள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்கள், அங்குள்ள கழிவறை கட்டுமானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு விடுப்பு அளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் அனுப்பப்பட்டனர். ஏராளமான பெற்றோர் பதற்றத்துடன் பள்ளி வளாகத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரைகண்ணன் தலைமையிலான உயர் போலீஸ் அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச் சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் பி.வி. பெர்சிஸ் ஞானசெல்வியிடம் திருநெல்வேலி டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மாணவர்கள் போராட்டம்:

திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி டவுனிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியான சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் காயமடைந்தனர். இச் சம்பவத்தை அடுத்து பள்ளியில் சகமாணவர்கள் ஆவேசமடைந்து வகுப்பறைகளில் மேஜை, நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். வளாகத்திலிருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில ஆசிரியர்களின் கார் கண்ணாடிகளும் கல்வீசி தாக்கப்பட்டன. பள்ளி வளாகத்திலிருந்து வெளியேறிய மாணவர்களில் ஒரு பகுதியினர் எஸ்.என். ஹைரோட்டில் திரண்டதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து டவுன் வழியாக செல்லும் வாகனங்களும், டவுனிலிருந்து சந்திப்பு செல்லும் வாகனங்களும் தச்சநல்லூர் வழியாக இயக்கப்பட்டன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஏராளமான போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சாலையில் திரண்டிருந்த மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்வித்துறையின் அலட்சிப்போக்கை கண்டித்தும், திருநெல்வேலி பேட்டையிலுள்ள மதிதா இந்துக் கல்லூரிமுன் மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாப்டர் பள்ளிமுன் திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட தலைவர் பிரம்மநாயகம், இந்து வியாபாரிகள் நல சங்க மாவட்ட தலைவர் முருகன் காசி, துணை தலைவர் அம்பலவாணன் உள்ளிட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சட்டப் பேரவை தலைவர், அமைச்சர் அஞ்சலி:

திருநெல்வேலியில் சாப்டர் பள்ளியில் சுவர் விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் நிதியுதவி:

பள்ளிக் கழிவறை இடிந்து விருழந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

3 பேர் கைது:

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித்தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை ஞானசெல்வி, காண்ட்ராக்டர் ஜான்கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீஸார் வழக்கு பதிந்து நேற்றிரவில் கைது செய்தனர்.

பள்ளிக்கு விடுமுறை:

இதற்கிடையில், இன்று (17 ஆம் தேதி முதல்) வரும் 26.12.2021 வரை பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களில் அலட்சியம் காட்டக்கூடாது எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்