நரிக்குறவர் குடும்பத்தைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர், ஓட்டுநர் பணியிடை நீக்கம்

By எல்.மோகன்

குமரியில் நாற்றம் அடிப்பதாகக் கூறி மீனவப் பெண்ணைப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவத்தைப் போல், நரிக்குறவர் குடும்பத்தை இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சமீபத்தில் தலைச்சுமையாக மீன் விற்கும் வாணியக்குடியைச் சேர்ந்த செல்வமேரி என்ற மூதாட்டியை மீன் நாற்றம் அடிப்பதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட நடத்துநர் உட்பட 3 பேரைப் பணியிடை நீக்கம் செய்து குமரி போக்குவரத்துத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இதைப் போன்றே தற்போது மற்றொரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேருந்தில் வள்ளியூரைச் சேர்ந்த கணவன், மனைவி, சிறுவன் ஆகிய 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர். பேருந்து புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தை நிறுத்திய நடத்துநர், கணவன், மனைவி, மற்றும் குழந்தைகளைப் பேருந்தில் இருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டார். அத்துடன் அவர்களின் துணி மற்றும் உடமைகளைப் பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார்.

அந்நேரத்தில் நரிக்குறவர் சிறுவன் அழுதுகொண்டே சத்தமிடுவதும், சாலையோரம் நின்ற ஆட்டோ ஓட்டுநர் நரிக்குறவர் குடும்பத்தினரின் உடமைகளை எடுத்துக் கொடுத்து உதவுகிறார். இதை அங்கு நின்றவர்கள் செல்பேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நரிக்குறவர் குடும்பத்தினரை இறக்கிவிட்ட நடத்துநர் ஜெயதாஸ் (44), ஓட்டுநர் நெல்சன் (45) ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் அரவிந்த் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் நடத்துநர், ஓட்டுநர் தரப்பில் கூறுகையில், ''பேருந்தில் இருந்த நரிக்குறவர் குடும்பத்தினரை எவ்வித பாரபட்சமும் பார்த்து இறக்கிவிடவில்லை. கணவர் குடிபோதையில் இருந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பேருந்துக்குள் கூச்சலிட்டவாறு சண்டை போட்டுக்கொண்டு வந்தனர். அப்போது அவர்களது குழந்தை உரக்க அழுதுகொண்டே இருந்தது. இது பிற பயணிகளுக்கு இடையூறாக இருந்ததால் அவர்கள் கண்டித்தனர். இந்நிலையில்தான் நரிக்குறவர் குடும்பத்தினர் இறக்கி விடப்பட்டனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்