தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் குழு கடன் ரூ.2,674.64 கோடி தள்ளுபடி: வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்டு அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

கூட்டுறவு நிறுவனங்களால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,674.64 கோடி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி குறித்து உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அந்த கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை செயலர் முகமது நசிமுத்
தின் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய நிதிநிலை அறிக்கையில், ‘‘கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, ரூ.2,766 கோடி தள்ளுபடி செய்யப்படும்’’ என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கூட்டுறவு நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து திரட்டும் குறுகிய காலவைப்புத் தொகைகளில் இருந்தும் சங்கங்களின் சொந்த நிதியில் இருந்தும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நபார்டு, டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றும் 11.50 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, கடன்களின் நிலுவை ரூ.2,755.99 கோடியாக உள்ளது. இதில் அசல் தொகை மட்டும் ரூ.2,459.57 கோடி என்றும் இந்த அசல் தொகையில் கூட்டுறவு நிறுவனங்களின் சொந்த நிதியில் இருந்து ரூ.1,092.47 கோடியும், நபார்டு உள்ளிட்ட மற்ற உயர் கூட்டுறவு நிறுவனங்களிடம் இருந்து ரூ.1,367.10 கோடியும் பெறப்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.2,755.99 கோடியை தள்ளுபடி செய்யும்படியும், தள்ளுபடி செய்யும் தொகையை ஒரே தவணையில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கும்படியும் கோரினார்.

இதை பரிசீலித்த தமிழக அரசு, மகளிர் சுய உதவிக்குழு கடன் நிலுவையில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, அபராத வட்டி, இதர செலவினங்கள் தவிர்த்து அசல் தொகையான ரூ.2,459.57 கோடி மற்றும் வட்டி ரூ.215.07 கோடியும் சேர்த்து ரூ.2,674.64 கோடியை தள்ளுபடி செய்ய அனுமதி வழங்குகிறது. இந்த நிதியாண்டில் இதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்படும். மீதமுள்ள தொகையை 7 சதவீத வட்டியுடன் 4 ஆண்டுகளில் விடுவிக்கவும் அனுமதியளித்துள்ளது.

வழிகாட்டுதல்கள்

# கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
# மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருந்த கடன்களுக்கான அசல், வட்டி மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
# அரசாணை வெளியிடப்படும் நாள் வரை, குழுவால் கடன்தொகை பகுதியாக செலுத்தப்பட்டிருந்தால் எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
# குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்கள் மட்டுமே தள்ளுபடிக்கான தகுதியுடையவர்களாவர்.
# இல்லாத மற்றும் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன், ஆதார் எண், பான் எண், கணக்கு விவரங்கள், குடும்ப அட்டை தகவல்கள் அளிக்காத மற்றும் தரவுகள்சரியாக இல்லாத கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
# தமிழக அரசின் குடும்ப அட்டை இல்லாது, பிற மாநிலங்களால் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் வைத்திருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
# ஆதார் அட்டையில் தமிழக முகவரி இல்லாமல் பிற மாநில முகவரி இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
# அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை பிரிவால் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
# ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களில் இருந்து பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் இதில் தகுதியற்றவர்களாவர்.
# மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தகுதி அடிப்படையில் தள்ளுபடி உண்டு. தள்ளுபடி கோரும் உறுப்பினர்கள் எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருந்தால் தள்ளுபடி இல்லை.
# அரசு ஊழியர்கள், அவர்களின்குடும்பத்தினர், தொகுப்பூதிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்டோருக்கு தள்ளுபடி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 mins ago

மேலும்