மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பாம்புகள், எலிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகப் பழங்குடி நாடோடி மக்கள், பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாடுகளுடன் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள், பாம்பு, எலிகளைப் பறிமுதல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டது. இந்தப் படம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றித் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாமகவைச் சேர்ந்த அன்புமணி கண்டனம் தெரிவித்தார். அதனால், இந்தப் படத்தில் நடித்த சூர்யாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சூர்யாவுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் இயக்குநர் ஞானவேல், வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், இந்தப் படத்தின் பிரச்சினை தற்போது வரை தீரவில்லை.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பழங்குடி நாடோடி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கைகளில் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாட்டுடன் வந்து சூர்யாவுக்கும், அவர் நடித்த 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர். பாம்பு, எலிகளைப் பழங்குடி நாடோடி மக்கள் கொண்டுவந்ததால் தகவல் அறிந்த மதுரை மாவட்ட வனத்துறையினர் விரைந்து வந்து பழங்குடி நாடோடி மக்களிடம் பாம்புகள், எலிகளைத் தரும்படியும், அவற்றைத் தாங்கள் பாதுகாப்பாகக் காட்டில் கொண்டு போய்விடுகிறோம் என்றும் கேட்டனர்.

அதற்கு அந்த மக்கள், நாங்கள் உங்களை விட பாம்புகள், எலிகளுக்குப் பாதுகாப்பானவர்கள், நாங்களே பாதுகாப்பாகக் கொண்டுபோய் விடுகிறோம் என்று கொடுக்க மறுத்தனர். வனத்துறையினர் வருகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு மக்கள் அமைப்பைச் சேர்ந்த ஆர்.மகேஷ்வரி கூறுகையில், ‘‘நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிற அநீதிகள் பற்றியே ‘ஜெய் பீம்’ படத்தில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்குப் பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு தெரிவிக்கிறோம். இதற்கு முன் யாரும் இப்படியொரு படத்தை எடுக்கவில்லை.

இந்தப் படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்களை உடனே செய்து தரும்படி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் ஆட்சியர்களும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இதற்கு நாங்கள் தமிழக அரசிற்கும், நடிகர் சூர்யாவுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எந்தச் சூழ்நிலையிலும் நடிகர் சூர்யாவுக்குப் பழங்குடி நடோடிகள் மக்கள் ஆதரவாக இருப்போம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்