அரக்கோணம் அருகே ரயில் மோதியதில் 2 கூலித் தொழிலாளர்கள் பலி: கொலையா, விபத்தா என போலீஸ் விசாரணை

By ந. சரவணன்

அரக்கோணம் அருகே மின்சார ரயில் மோதியதில் 2 கூலித்தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது விபத்தா? அல்லது கொலையா? எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் பார்த்தசாரதி (30). இவரது நண்பர் ரங்கன் மகன் சுகுமார் (26). இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு 11.15 மணியளவில் அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில்வே மார்க்கத்தில் தக்கோலம் - திருமால்பூர் ரயில் நிலையம் இடையே சேர்ந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பார்த்தசாரதியும், சுகுமாரும் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் அடிபட்டு மயங்கிக் கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நெமிலி காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு ரயிலில் அடிபட்டு சுகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார்.

காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நடைபெற்ற இடம் செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினரின் எல்லைக்கு உட்பட்ட இடம் என்பதால் செங்கல்பட்டு ரயில்வே காவல் துறையினர் 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ரயில்வே காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சேத்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பார்த்தசாரதி, சுகுமாருடன் சேர்ந்த மேலும் ஒருவர் என 3 பேர் தண்டவாளம் அருகே அமர்ந்து நள்ளிரவில் பேசிக் கொண்டிருந்ததாகவும், மின்சார ரயிலில் 2 பேர் மட்டுமே அடிபட்டு உயிரிழந்து இருப்பதால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகள் உயிரிழப்பு:

அரக்கோணம் அடுத்த சேத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணி (55). இவர் தனக்குச் சொந்தமான 26 ஆடுகளை மேய்ச்சலுக்காகப் பின்னாவரம் ரயில்வே கேட் அருகே ஓட்டிச் சென்றார். அப்போது, ஆடுகள் வரிசையாகத் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தபோது திருப்பூரில் இருந்து அரக்கோணம் வழியாக வந்த ரயில் ஆடுகள் மீது மோதியது. இதில், 23 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

58 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்