கீழடி ஆய்வு; நிலம் தந்தவர்களுக்குப் பட்டா வழங்க அலைக்கழிப்பு: முதல்வரிடம் புகாரளிப்பதையும் தடுத்த அதிகாரிகள்

By என்.சன்னாசி

கீழடி அகழாய்வுக்கு நிலம் கொடுத்தவர்களுக்குப் பட்டா வழங்க அலைக்கழித்து வருவதோடு முதல்வரிடம் புகாரளிக்க முயன்றதையும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வுப் பணிக்கென 2019-ல் அவ்வூரைச் சேர்ந்த சிலர் இலவசமாக நிலங்கள் வழங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு நில உரிமையாளர்களிடமே திரும்ப வழங்கப்பட்டன. நிலம் வழங்கியவர்களுக்குப் பட்டா மாறுதல் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெற்று, துரிதமாகச் செய்து தரவேண்டும் என, அரசு செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், அகழாய்வுக்கு நிலம் கொடுத்த கொந்தகையைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன்கள் மனோகரன், கருமுருகேசன், ஆண்டிச்சாமி, முத்துராஜா ஆகியோர் பட்டா மாறுதல் செய்து கொடுப்பதில் தாமதம் செய்து, அவர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கருமுருகேசன் கூறுகையில், ''தொடக்கத்தில் அகழாய்வுக்கு நிலம் கொடுக்க ஒப்பந்தம் செய்தபோது, எங்களுக்கான பட்டா மாறுதல் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. நாங்கள் 5 ஏக்கர் நிலம் கொடுத்தோம். இருப்பினும், எங்களது ஊரில் குறைவாக நிலம் கொடுத்த சிலருக்கும் பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் துரிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டுப் பட்டாவிலுள்ள எங்களுக்கான 5 ஏக்கர் நிலத்தைப் பாகப் பிரிவினை செய்து, தனித்தனியே பட்டா மாறுதல் செய்து கொடுக்கப் பலமுறை முயன்றும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வர் கீழடிக்கு வந்தபோது, அவரிடம் நேரில் மனு கொடுக்கத் திட்டமிட்டு இருந்தேன். இதை அறிந்த உளவுத்துறையினர் முதல்வரைச் சந்திக்க உரிய ஏற்பாடுகளைச் செய்தனர். கடைசி நேரத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திருப்புவனம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பட்டா மாறுதல் போன்ற எங்களது கோரிக்கையை ஓரிரு நாளில் முடித்துத் தருவதாகக் கூறியதால் முதல்வரின் சந்திப்பைத் தவிர்த்தேன். உளவுத்துறையினர் கூட என் மீது அதிருப்தி தெரிவித்தனர். ஆனாலும், வருவாய்த் துறையினர் எங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. தொடர்ந்து அலைக்கழிப்பு செய்கின்றனர். மீண்டும் முதல்வரிடம் மனு அளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளுகின்றனர்'' என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியனிடம் கேட்டபோது, ''கருமுருகேசன் குடும்பத்தினருக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அவர்கள் பட்டா மாறுதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணம் பதிவில்லாத ஆவணமாக இருப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்