வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார்: திருவள்ளுவர் பல்கலை. முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மீது விஜிலென்ஸ் வழக்கு

By வ.செந்தில்குமார்

திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களது இரண்டு வீடுகளில் சோதனை நடத்தினர்.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகக் கடந்த 2013-2017 வரை பணியாற்றியவர் அசோகன். இவரும், இவரது மனைவி ரேணுகாதேவியும் கடந்த 1-4-2012 முதல் 30-4-2016 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 50 ஆயிரத்து 818 என்ற அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கின் அடிப்படையில் காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள அசோகனின் வீடு, திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வீட்டில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று (அக்.7) காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். வேலூரில் காவல் ஆய்வாளர் விஜய் தலைமையில் நடைபெற்ற சோதனையில் சொத்துகள் தொடர்பான பல ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் அசோகன். இவரது மனைவி ரேணுகாதேவியும் நடுத்தரக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். திருவாரூர் திரு.வி.க. அரசினர் கல்லூரியில் விரிவுரையாளராக அசோகன் கடந்த 1993 முதல் 2007 வரை பணியாற்றியுள்ளார். பிறகு கூடலூரில் உள்ள கோவை பாரதியார் பல்கலை. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக 2007-2012 வரை பணியாற்றியுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் திரு.வி.க. அரசுக் கல்லூரிப் பணிக்குத் திரும்பியவர் அயல் பணி அடிப்படையில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக 2013-2017 வரை பணியாற்றினார். 2017-ல் மீண்டும் திரு.வி.க. அரசுக் கல்லூரிக்குத் திரும்பினார். அங்கு அவர் மீது நிலுவையில் இருந்த பல்வேறு முறைகேடு புகார்களின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடந்த 2008-ல் ரேணுகாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் காட்பாடியில் உள்ள அக்சீலியம் தன்னாட்சிக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகக் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இருவரும் தற்போது காட்பாடி வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குப் பெண் குழந்தை உள்ளது.

அசோகன், ரேணுகாதேவி இருவரின் பெயரிலும் வேலூர், திருவாரூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளனர். 2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தங்களது வருமானத்தை விட 63 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். இது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்