உரத் தட்டுப்பாடு, விலை உயர்வைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

உரத் தட்டுப்பாடு, விலை உயர்வைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 07) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. உரத் தட்டுப்பாடு மற்றும் உர விலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறுவை சாகுபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, தமிழகம் முழுவதும் சம்பா நடவு தொடங்கியுள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு காரணமாக நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேரடி விதைப்பாக இருந்தாலும், விதை விதைத்து நாற்றைப் பறித்து நடவு நடும் முறையாக இருந்தாலும் அடியுரம் கண்டிப்பாகத் தேவை. தழைச்சத்து உரமான யூரியாவும், மணிச்சத்து உரமான டி.ஏ.பி. எனப்படும் டை-அமோனியம்-பாஸ்பேட்டும் அடியுரமாக இட்டு அதன் பிறகுதான் நேரடி விதைப்பாக இருந்தாலும், நடவாக இருந்தாலும் செய்ய முடியும். அப்போதுதான் நெற்பயிர்கள் நன்றாக வேர் பிடித்து, அதிக கிளை வைத்து செழித்து வளரும்.

ஆனால், டி.ஏ.பி. உரத்துக்கான மூலப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து விட்டதாலும், அதற்கு இணையான அளவில் உர மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாலும் உர நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. அதனால் சந்தையில் இந்த இருவகை உரங்கள் கிடைக்கவில்லை.

பல இடங்களில் யூரியா மூட்டைக்கு ரூ.100 வரையிலும், டி.ஏ.பி. மூட்டைக்கு ரூ.400 வரையிலும் விலை உயர்ந்துள்ளது. பல இடங்களில் நூண்ணூட்டச் சத்து உரங்கள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை வாங்கினால்தான் இந்த இரு வகை உரங்களும் வழங்கப்படும் என்று உர வணிகர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் ஏழை விவசாயிகளால் சம்பா சாகுபடியைத் தொடங்க முடியவில்லை.

மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக காவிரியில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், உரம் ஓரளவு தட்டுப்பாடின்றிக் கிடைத்ததாலும் குறுவை சாகுபடி வழக்கத்தை விட அதிக பரப்பளவில் செய்யப்பட்டது.

குறுவை பருவத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக விளைச்சலும் எட்டப்பட்டுள்ளது. அதனால், விவசாயிகள் மனநிறைவு அடைந்துள்ளனர். விவசாயிகளின் மனநிறைவும், மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களின் தட்டுப்பாடு போக்கப்பட வேண்டும்; அவை நியாயமான விலையில் விற்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்காக உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தின் அளவை மத்திய அரசு உயர்த்த வேண்டும்; அதன் மூலம் உரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குறுவை நெல் சாகுபடி குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. சம்பா சாகுபடி அதை விட சுமார் 5 மடங்கு பரப்பளவில் செய்யப்படும். அதற்கேற்ற அளவில் உரங்களின் தேவை அதிகரிக்கும். யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்ளை அதிக அளவில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அதற்கு இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்துக்குத் தேவையான உரங்களைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உர விற்பனையை முறைப்படுத்த வேண்டும். வெளிச்சந்தையில் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், உரங்களுக்கான தட்டுப்பாடு தீரும்வரை யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய இரு உரங்களையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களைக் கூடுதல் விலைக்கு யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்