பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதிச் சான்றிதழ்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

பழங்குடியின மக்களுக்கும் மற்ற சாதியினரைப் போல ஆன்லைன் வாயிலாக சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்கும் நோக்கில், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான வரித்துறை சான்றிதழ், முதல் தலைமுறைப் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை மின்னணு முறையில் வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்ததன் அடிப்படையில், வருவாய்த் துறை சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது

பழங்குடியின மக்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும்போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரின் ஒப்புதல் மற்றும் கருத்துகளைக் கேட்டறிந்து, ஆன்லைன் வாயிலாகவே டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளராக இருந்த அண்ணாமலை ஐஏஎஸ், தகுதியற்ற நபர்கள் முறைகேடாகப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்குவதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, இனி பழங்குடியின மக்களுக்கு ஆன்லைன் வாயிலாக சாதிச் சான்றிதழ் வழங்கக்கூடாதென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதினார்.

இதன் காரணமாக, ஆன்லைன் வாயிலாக பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில், அதனை எதிர்த்தும், மற்ற சாதியினருக்கு வழங்கப்படுவது போல பழங்குடியின மக்களுக்கும் ஆன்லைன் வாயிலாக சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரியும், ஆதி பழங்குடி நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வில் இன்று (அக். 01) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துரைசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர், பழங்குடியினருக்கான சாதிச் சான்று உரிய நேரத்தில் வழங்காமல் ஆண்டுக்கணக்கில் கால தாமதம் செய்யப்படுவதால், மாணவர்களின் படிப்பு, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும், விசாரணை, சரிபார்ப்பு என்ற பெயரில் இழுத்தடிக்கப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாகச் சான்றிதழ் வழங்கினால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் எடுத்துரைத்தனர்.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் போல இனி பழங்குடியினருக்கும் சாதிச் சான்றிதழ்களை மின்னணு முறையில் வழங்கப்பட உள்ளதாகவும், விண்ணப்பிப்பவர்களும் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக வருவாய்த் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சார்பில் கடந்த 3-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறி அதன் நகலைத் தாக்கல் செய்தார்

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

33 mins ago

சினிமா

38 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்