பிடிகொடுக்காத விஜயகாந்த், ராமதாஸ்: கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறும் பாஜக

By எம்.சரவணன்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பிடிகொடுக்காததால் கூட்டணி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

மத்தியில் தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சியில் இருக்கும் பாஜக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து 3-வது அணியை பாஜக அமைத்தது. 2 எம்.பி. இடங்களைப் பெற்ற இந்தக் கூட்டணி 19 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அதுபோல வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் தேமுதிக, பாமக துணையுடன் 3-வது அணியை அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக தலை வர்கள் விஜயகாந்தை இரு முறை வெளிப்படையாகவே சந்தித்துப் பேசினர்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை அவரது வீட்டில் தமிழிசை சவுந்தரராஜன் 3 முறை சந்தித்துப் பேசினார். ஆனாலும் விஜயகாந்த், பிரேமலதா தரப்பில் எந்தவிதமான சாதகமான பதிலும் வரவில்லை.

இது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ''அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாவிட்டால் தேமுதிக, பாமகவு டன் 3-வது அணி அமைப்பது. அதுவும் சாத்தியப்படாவிட்டால் பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என அனைத்து அம்சங்களையும் பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தேமுதிக, இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என பெரும்பாலான கட்சிகள், ‘மதவாதத்தை வீழ்த்த வேண்டும்' எனக் கூறி திமுக அணிக்கு சென்றுவிடும். இதன் மூலம் திமுக அணி வெற்றி பெற்றுவிடும் என முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார்.

எனவே, தேமுதிக, பாமகவுடன் கூட்டணி அமைக்க தொடக்கத்தில் இருந்தே முயற்சித்து வருகிறோம். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே கூட்டணி என ராமதாஸ் உறுதியாகக் கூறிவிட்டார். பலமுறை சந்தித்தும் விஜயகாந்தும், பிரேமலதாவும் பிடிகொடுக்கவில்லை. இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாத குழப்பத்தில் இருக்கிறோம்'' என்றார்.

‘‘பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசிலும், தேசிய ஜன நாயகக் கூட்டணியிலும் தேமுதிக வுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது உட்பட கடந்த மக்களவைத் தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அளித்தீர்கள். இப்போது கேட்டால் மோடியும், அமித்ஷாவும்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள். எனவே, அமித்ஷாவை அழைத்து வாருங்கள் பேசுவோம்'' என தன்னை சந்தித்த பாஜக தலைவர்களிடம் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து தேமுதிக வுடன் பாஜக தலைவர்கள் தொடர்ந்து நேரடியாகவும், மறை முகமாகவும் பேசி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் கேட்டபோது, ‘‘தற் போதைய நிலையில் அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி அமையும் என உறுதியாக நம்புகிறோம்'' என் றார்.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கவுரவமான வாக்கு சதவீதத்தை பெறாவிட்டால் 2019 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை தோற்கடிக்க என்ன செய்ய வேண்டும்?

சமீபத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘அதிமுகவை தோற்கடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’’ என கேட்டாராம். அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், ‘‘அதிமுகவுடன் நாம் (பாஜக) கூட்டணி அமைத்தால் போதும். அதிமுக தோற்றுவிடும். கடந்த 2004-ல் அதுதான் நடந்தது’’ எனக் கூற அமித்ஷா உட்பட அனைவரும் சிரித்து விட்டார்களாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்