புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றப் போவது பாஜகவா? என்.ஆர்.காங்கிரஸா?

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அக்டோபர் 4-ல் நடக்கிறது. இப்பதவியைக் கைப்பற்றப்போவது பாஜகவா, என்.ஆர்.காங்கிரஸா என்பது விரைவில் தெரியவரும்.

யூனியன் பிரதேசமான புதுவையில் இரு எம்.பி.க்கள் உள்ளனர். மக்களால் தேர்வான மக்களவை உறுப்பினராக காங்கிரஸைச் சேர்ந்த வைத்திலிங்கம் உள்ளார். மக்களால் தேர்வாகும் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார். இவரின் பதவிக் காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது ரங்கசாமியின் நெருங்கிய நண்பரான கோகுலகிருஷ்ணனை எம்.பி.யாக்க அவரது கட்சி எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. இதனால் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பதவியை அக்கட்சிக்கு ரங்கசாமி விட்டுத்தந்தார். அத்துடன் தனது நண்பரான கோகுலகிருஷ்ணனை அக்கட்சியில் இணைத்து எம்.பி.யாக்கவும் மாற்றினார்.

கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவதால் புதிய மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி வரும் 15-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். 22-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாள். 23-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 27-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம்.

போட்டி இருக்கும்பட்சத்தில் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

புதுவை மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இதனால் என்ஆர் - பாஜக கூட்டணிக்கு அதிக வாக்குகள் உள்ளன. இந்தக் கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியான திமுகவுக்கு 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 3 என மொத்தம் 11 எம்எல்ஏக்ககள் உள்ளனர்.

யார் போட்டியிட திட்டம்?

பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெறக் கூட்டணியிலுள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முயல்கின்றன. ரங்கசாமியுடன் பாஜக தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும், பாஜக தரப்பில் மத்திய இணை அமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் வேட்பாளராக காய் நகர்த்தி வருகின்றனர். இதில் எம்.பி. பதவிக்கான ரேஸில் வெல்வது யார் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்