அண்ணாவின் ஆன்மா மன்னிக்குமா?- திமுகவுக்கு காந்திய மக்கள் இயக்கம் கேள்வி

By செய்திப்பிரிவு

அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் மதுவிலக்கைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்காவிட்டால் அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''ஆன்லைனில் மது விற்பனை இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதியன்று அறிவித்துள்ளார். மதுவை நுகரும் வழியை மேலும் எளிதாக்காமல் இருப்பதற்காக, அமைச்சருக்கு அநேக கோடி வணக்கங்கள். ஆனால், மதுவிலக்கு குறித்து வாய் திறப்பதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் இந்த ஆட்சியும் தன் பயணத்தைத் தொடர்வதுதான் வேடிக்கை.

பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் பல முறை மன்றாடியும், தாங்களே, தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தாலும், முழுமையான மதுவிலக்கை நோக்கி ஒரு துரும்பு கூடக் கிள்ளிப் போடப்படவில்லை என்பது ஆழ்ந்த மன வருத்தத்தை உண்டாக்குகிறது. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடக்கூடாதா? என்ற ஆதங்கம் மனதில் இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைக்கப்பட்டது. 2006 முதல் 2021 வரை தமிழகத்தில் 1,311 மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது அரசுத் தரப்புச் செய்தி. அதாவது, 6,736 மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் அவை தற்போது 5,425 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்பட்ட போதிலும் இந்தக் காலங்களில் மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதே காலங்களில் ரூ.4,195 கோடியாக இருந்த மது விற்பனை ரூ.33,811 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 2 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை மது விற்பனை உயர்ந்துள்ளது என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாகக் கூடியுள்ளது. 2007-ல் உள்நாட்டில் தயாரிக்கும் அயல்நாட்டு மதுவகைகள் 24 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகின. (ஒரு பெட்டியில் 48 குவார்ட்டர் பாட்டில்கள்) இது 2021-ல் 50 லட்சம் பெட்டியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மது விற்ற முதல் 33,133.24 கோடி ரூபாய் என்றால், இந்த ஆண்டு 33,811.14 கோடி. அதாவது 677.9 கோடி ரூபாய், அதிகரித்துள்ளது. இதன்மூலம் குடிநோயாளிகளும், குற்றங்களும் அதிகரிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.

இதற்கிடையே மதுவிலக்குப் பிரச்சாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நான்கு கோடி ரூபாய் எப்படிச் செலவிடப்படப் போகிறது? 'குடி, குடியைக் கெடுக்கும்' என்று மதுப் புட்டிகளில் அச்சிடத் தெரிந்த அரசுக்கு, குடிப் பழக்கத்தில் மேலும், மேலும் மக்களை மூழ்கடிக்காமல் இருக்க வழி தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் நடைமுறைப்படுத்த மனம் இல்லையா? மக்கள் மனங்களில் குறிப்பாகப் பெண்கள் மனங்களில் உலா வரும் இதுபோன்ற கேள்விகளுக்கு, அரசின் பதில் மௌனமாக இருத்தல் அல்ல என்று காந்திய மக்கள் இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஓர் அரசின் வருமானத்திற்காக மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் திறப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாததாகும். மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், தொழுநோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது என்று கூறி தமிழ்நாட்டில் மது விற்பனையை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தவர் அறிஞர் அண்ணா.

அவரால் உருவாக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் மதுவிலக்கைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்காவிட்டால் அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது; தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது''.

இவ்வாறு குமரய்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்