புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

By செ. ஞானபிரகாஷ்

கரோனா நோய் பரவலை கருத்தில்கொண்டு தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், சிபிஐ (எம்-எல்) கட்சியின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கரோனா நோயின் கொடுமை புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரும் பாதிப்பினை உருவாக்கியுள்ளது. 2021 மே மாதத்தில் மட்டும் 740 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வருவாய் ஈட்டக்கூடிய குடும்ப உறுப்பினர்களை பல குடும்பங்கள் இழந்து பரிதவிக்கின்றனர்.

மத்திய அரசு நோய் பரவலை கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையின் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கிவருகிறது. குறிப்பாக முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றல் மற்றும் திருமணம், சுப நிகழ்ச்சிகளில் மிகக் குறைந்த அளவில் நபர்கள் பங்கேற்க வேண்டும். அதேபோல் பண்டிகை போன்ற விழாக்கள் வீடுகளிலேயே நடத்திட வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தாக்கம் நீட்டித்து வரும்போது பொது இடங்களில் விநாயகர் சிலை அமைக்க ஊர்வலங்கள் சென்றிட துணைநிலை ஆளுநர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, சிலை ஊர்வலங்கள் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது ஆகியவற்றிற்கு தடை விதித்திருப்பது போல புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரும் ,முதல்வரும் கவனத்தில்கொண்டு நோய் பரவலை தவிர்த்திட விநாயகர் சதுர்த்தி விழாவினை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

விநாயகர் சிலை அமைக்க பெரியார் திக., எதிர்ப்பு

தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கடந்த கரோனா கால கசப்பான சூழல்களை மனதில் கொண்டு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப்பெற வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் உள்துறை செயலர், சுகாதாரத்துறை செயலர் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தமிழ்நாடு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல அரசுகள் பொது இடங்களில் விநாயகர் வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு தடைவிதித்துள்ளது. ஆனால் புதுவையில் அனுமதி வழங்கியுள்ளது மதவெறி அமைப்புகளை திருப்திப்படுத்தும் நோக்கில் உள்ளது. இதற்கு புதுவை அரசு நிர்வாகியான ஆளுநர் தமிழிசை துணைபோவது மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே பொது இடங்களில் விநாயகர் சிலை அமைப்பதற்கும், ஊர்வலத்திற்கும் வழங்கியுள்ள அனுமதியை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

17 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்