இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்: சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’என்ற திட்டத்தின் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ் மொழியில் நடத்தப்பட்ட வழிபாட்டையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கபாலீஸ்வரர் கோயிலின் தக்கார் விஜயகுமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள குருக்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பதாகைகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் அர்ச்சனைசெய்ய விரும்பும் பக்தர்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

மேலும் விரிவுபடுத்தப்படும்

இதனைத்தொடர்ந்து, முதல்கட்டமாக வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 47 பெரியகோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள539 முக்கிய கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதற்காக, முருகன், விநாயகர், பெருமாள், சிவன், அம்மன் எனதனித்தனி கடவுள்களுக்கு ஏற்றவகையில் ‘போற்றிப் புத்தகங்கள்’ தனித்தனியாக 14 வகைகளில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன.

ஆடி மாத திருவிழாக்களை மனதில் வைத்துதான் சில கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. கரோனா காலகட்டத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகள் வந்தால், அந்த வழிபாட்டுத்தலங்களும் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

தமிழில் குடமுழுக்கு

தமிழகத்தில் உள்ள கோயில் களில் இனி தமிழில் குடமுழுக்கு நடைபெறுமா? என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘அப்பகுதியில் உள்ளபெரும்பான்மை மக்கள் விருப்பப்பட்டால் அக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு செய்யப்படும். எந்தவிதமான சச்சரவுக்கும் இடமில்லாமல், யார் மனதும் புண்படாமல் ஆகம விதிகளை பின்பற்றி முறையாக குடமுழுக்கு அனைத்து கோயில்களுக்கும் செய்யப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்