தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை; கேரளா, கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பு: ஆக. 5-ம் தேதி முதல் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்குவந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையின் மூலமும், ஃபோகஸ் வாலண்டியர்ஸ் என்ற தன்னார்வலர்கள் மூலமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம்வருவோருக்கு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணைதடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் கோவையில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுபரவலைத் தடுக்க, நோய் பரவல்தடுப்புப் பணியை, மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் கோவையில் பிற மாநில எல்லைகளை ஒட்டியுள்ள சோதனைச் சாவடிகள் உட்பட 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணியை மாவட்டநிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கேரளா மாநிலத்தின் பாலக்காட்டில் இருந்து வாளையாறு சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமானோர் கோவைக்கு வந்து செல்கின்றனர். இவர்களையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது:

கேரளா, கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் இருந்து பலவித தேவைகளுக்காக, சராசரியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேற்கண்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களிடம் கரோனா நெகட்டிவ் சான்று கேட்பது இல்லை. எனவே, மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளிலேயே, மேற்கண்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.

கரோனா தொற்று அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளதா என விசாரித்து, அவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.தொற்று அறிகுறி இருந்தால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.எல்லைப் பகுதியில் மட்டுமின்றி, மாவட்டத்தில் அவர்கள் தங்கும் இடத்திலும், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

தன்னார்வலர்கள்

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ‘இந்துதமிழ்திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் கரோனா பரவலைத்தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்கள் இ-பதிவுசெய்து இருப்பர். அந்த ஆவணங்களை வைத்து, மாவட்டத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையின்மூலம், குறிப்பிட்ட நாட்களுக்கு சம்பந்தப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தினமும் தொடர்பு கொண்டு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா, உடல் வெப்ப நிலை எவ்வளவு உள்ளது என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதன்மூலம் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் 80 சதவீதம் பேர் கண்காணிக்கப்படுகின்றனர். இதே விவரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

உள்ளாட்சிகளில் 8,932 எண்ணிக்கையில் ‘ஃபோகஸ் வாலண்டியர்ஸ்’ எனப்படும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்வது இவர்களது பணியாகும். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் முகவரிக்குச் சென்று, அவர்களின் உடல் நிலை குறித்தும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி குறித்தும் கேட்டறிந்து, குறிப்பேட்டில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் தினமும் சென்று கண்காணித்து வருகின்றனர். மேற்கண்ட இரண்டு முறைகளின் மூலம் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்து தங்குபவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று பயணிகளுக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதில்,எம்எல்ஏ இ.கருணாநிதி, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பநிலைபரிசோதனையும், ஆர்டிபிசிஆர்பரிசோதனையும் அவசியம்.ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக ரூ.900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 4 மணி நேரத்தில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 13 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் அதிநவீனமுறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விமான நிலையத்தில் இது தொடங்கப்படும்.

கடந்த 3 நாட்களாக சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து நிலைகளிலும் தொற்றின் எண்ணிக்கையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவின் எந்த பகுதியில் இருந்தும் தமிழகத்துக்குள் வந்தாலும் இதுவரைவெப்பநிலை மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வந்தது. தற்போது கேரளாவில் தொற்று அதிகரித்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மிக அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யாதவர்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதை தவிர்த்து ஏற்கெனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 14 நாட்கள் கழித்து வருபவர்கள் அதற்கான ஆவணத்தைக் காட்டி உள்ளே வரலாம். ரயில், பேருந்து, சொந்த வாகனத்தில் கேரளாவில் இருந்து வரும்போது பரிசோதனை முடிவு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ.1.65 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகளைத் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேரிடர் காலங்களில் கிருமி நீக்கு நிலையங்கள் அவசியம் என்பதால் அரசின் சார்பில் ரூ.75 லட்சம் செலவில் மத்திய கிருமி நீக்கு நிலையம் முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டத்தில் நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதோ, அங்கு தடுப்பூசிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னையில் 6,7,9,10 மற்றும் 13 ஆகியமண்டலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், தீவிர கண்காணிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

வணிகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்