தொற்று மீண்டும் பரவுவதைத் தொடர்ந்து மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு: தினசரி 12 ஆயிரம் பேருக்கு பரிசோதிக்க  உத்தரவு

By டி.ஜி.ரகுபதி

கரோனா தொற்று மீண்டும் பரவுவதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் தினமும் மேற்கொள்ளப்படும், கரோனா பரிசோதனை எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையின் தாக்கம், கோவையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருந்தது. மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரின் தொடர் நடவடிக்கையால், மாவட்டத்தில் படிப்படியாக கரோனா தொற்று பரவல் குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி முதல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் தொடக்கம் முதல் இன்று (ஜூலை 31) மதியம் வரை கரோனா தொற்றால் 2.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சைக்கு பின்னர் 2.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் இதுவரை கோவையில் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவப்படி மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபரைக் கண்டறிந்து சிகிச்சைக்கு அனுப்பும் மாவட்ட நிர்வாகத்தினர், அந்நபர் வசித்து வந்த பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்துகின்றனர். ஒரு பகுதியில் தொற்று அதிகமானால் அப்பகுதியை சீல் வைத்து தனிமைப்படுத்துகின்றனர்.

தற்போதைய நிலையில் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் 20 தனியார் மையங்கள் என மொத்தம் 22 மையங்கள் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது,‘‘ கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கோவையில் சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கடந்த 26-ம் தேதி 183 பேர், 26-ம் தேதி 164 பேர், 27-ம் தேதி 169 பேர், 28-ம் தேதி 179 பேர், 29-ம் தேதி 188 பேர், 30-ம் தேதி 230 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் தடுப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணியாமல் இருப்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கரோனா பரிசோதனைகளை தினமும் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

12 ஆயிரம் பரிசோதனை இலக்கு

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க நோய்த் தடுப்புப் பணி, கண்காணிப்புப் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தினமும் மாலை ஒரு மணி நேரம் அதிகாரிகளுடன் கரோனா தடுப்புப் பணி நிலவரம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஒருநாள் அதிகரிப்பு, ஒருநாள் குறைவு என மாவட்டத்தில் கரோனா பரவல் லேசான பரவலாக உள்ளது.

இது தீவிர நிலைக்குச் செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1.6 சதவீதமாக கரோனா பரவல் உள்ளது.

தொற்று பரவலைத் தடுக்க, தினமும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை மாவட்டத்தில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 26-ம் தேதி 8,646 பேருக்கும், 27-ம் தேதி 9,638 பேருக்கு, 28-ம் தேதி 10,356 பேருக்கு, 29-ம் தேதி 10,931 பேருக்கு, 30-ம் தேதி 10,773 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தினமும் சராசரியாக 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம், தொற்றாளர்களைக் கண்டறிந்து, தொற்று பரவலைத் தடுக்க முடியும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்