அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பது, சமூகநீதி சக்திகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இந்திய மத்திய அரசு ஒப்புக்கொண்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காகத் தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களை நடத்திய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

27.06.2019 அன்று அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்து முதன்முதலாக இது தொடர்பாக விசிக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். அதன் பின்னரே இந்த அநீதி வெளியே தெரிந்தது.

அந்த மனுவில், 'இந்தியா முழுவதுமுள்ள ஏறக்குறைய 40,000 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தோராயமாக 6,000 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் தொகுப்பில் 2008-ம் ஆண்டு முதல் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் ஓபிசி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து மட்டுமே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் ஒட்டுமொத்தமாக 685 (245 + 440) இடங்களை ஓபிசி மாணவர்கள் இழக்கின்றனர். அகில இந்திய அளவில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 5,000 ஓபிசி மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

ஓபிசிக்கான இடஒதுக்கீடு மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் மட்டும் ஓபிசி இட ஒதுக்கீட்டை இந்திய அரசு ஏன் மறுக்கிறது?’ எனக் கேட்டிருந்தோம்.

அதன் பின்னர் 08.07.2019 அன்று அதிமுக அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக சார்பில் பங்கேற்றுப் பின்வரும் ஆலோசனையைத் தெரிவித்தோம்:

’பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், மத்திய தொகுப்பில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களில் இட ஒதுக்கீட்டை இதுவரை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

எனவே, மத்திய தொகுப்பில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களிலும் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்' எனக் கேட்டுக்ககொண்டோம். அதன் பின்னர், தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தினோம்.

2019 இல் விசிக எடுத்த முன்முயற்சி இப்போது பலனளித்துள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 ஓபிசி மாணவர்கள் மத்திய தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களைப் பெறவுள்ளனர்.

சமூக நீதியை நிலைநாட்டும் போராட்டத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்றாலும் இத்துடன் நமது பணி முடிந்துவிடவில்லை. மத்திய தொகுப்புக்கு இடங்களை வழங்கும் இந்தமுறையானது, 1986 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. எனவே, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெற முடியாத நிலையை கருத்தில் கொண்டு இந்த மத்திய தொகுப்பு உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது.

ஆனால், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்த தொகுப்பு முறைக்கான அவசியம் ஏதும் இப்போது இல்லை. அப்போது எம்பிபிஎஸ் இடங்களில் மட்டுமே மத்திய தொகுப்பு உருவாக்கப்பட்டது.

அதன்பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களில் 50% இடங்களை மத்திய தொகுப்புக்கு தர வேண்டுமென்றும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான இடங்களில் 100 % இடங்களையும் மத்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்கிற விதி இந்திய மத்திய அரசால் தன்னிச்சையாகக் உருவாக்கப்பட்டது.

இந்த இடங்களைப் பகிர்ந்து அளிப்பதற்கான முறையும் கூட மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் இந்திய ஒன்றிய அரசால் அவ்வப்போது முடிவு செய்யப்படுகிறது. எனவே, மத்திய தொகுப்புக்கு இடங்களை வழங்கும் இந்த முறையை ஒட்டுமொத்தமாகக் கைவிடுவதே மாநில உரிமைகளையும், சமூகநீதியையும் பாதுகாப்பதற்குப் பொருத்தமான வழியாக இருக்கும்.

ஆகவே, இனி வரும் காலங்களில் மத்திய தொகுப்புக்கு எம்பிபிஎஸ், முதுநிலை படிப்பு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு ஆகியவற்றுக்கு இடங்கள் வழங்குவதை முற்றாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது ஓபிசி பிரிவினருக்கு 27% இடங்களைக் கொடுப்போம் என ஒப்புக்கொண்டுள்ள இந்திய அரசு, கூடவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என்று சொல்லப்படும் முன்னேறிய சாதியினருக்கு 10% இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஏற்கெனவே, 10% வழங்கும் சட்டத்தை எதிர்த்து நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழக்கு தொடுத்து இருக்கிறது. அந்த வழக்குகள் எல்லாம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளன. இதற்கிடையில், மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லையென்றும் அந்தத் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட 50% உச்சவரம்பு சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் 10% இட ஒதுக்கீட்டை இந்திய அரசு எதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முனைகிறது எனத் தெரியவில்லை.

10% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகவே இருக்கும். எனவே, இந்த 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்