பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''பாஜக அரசு ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, நிறைவேற்ற முனைந்திருக்கின்றது. மீன் வளத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில், மீனவர்களின் மரபு உரிமையான மீன்பிடித் தொழிலுக்கு இச்சட்ட முன்வரைவு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.

இந்தியக் கடல் பகுதியை மூன்றாக வரையறை செய்து, நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரையிலான அண்மைக் கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என்று குறிக்கப்படுகிறது.

இதில் பாரம்பரிய மீனவர்கள் 12 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்கக் கூடாது. கடலில் மீன் பிடிக்கும் அனைத்து விசைப்படகுகளும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். மீன்பிடி உரிமம் பெற்றுதான் கடற்தொழிலை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப் பொருத்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம் மற்றும் கட்டுமரங்களும் கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, “வணிகக் கப்பல் சட்டம் 1958” இன் கீழ் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே மீன்பிடி உரிமங்கள் கொடுக்கப்படும்.

இதன்படி பதிவு செய்ய வேண்டுமானால் கப்பலில் வேலை செய்யும் மாலுமி கட்டுமரத்திலும் கூட இருக்க வேண்டும். கட்டுமரம், படகு இயக்க ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டும். இவை எதுவுமே பாரம்பரிய மீன்பிடிக் கட்டுமரங்களில் இருந்ததும் இல்லை. அதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை. ஆனால், புதிய சட்ட முன்வரைவில் இடம்பெற்று இருக்கின்றன.

12 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழமான நல்ல மீன்கள் நிறைந்துள்ள பகுதியில் அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளூர் பாரம்பரிய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி இல்லை.

தடையை மீறிச் செல்லும் மீனவர்கள் தண்டனைக்குள்ளாவர்கள். மீன் வளத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் கலன்களை ஆய்வு செய்ய இந்த முன்வரைவு அதிகாரம் அளிக்கிறது. இச்சட்டத்தை மீறும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறையில் அடைக்கவும், 5 லட்சம் ரூபாய் தண்டம் விதிக்கவும் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியக் கடல் எல்லைக்குள் சட்டத்தை மீறி பன்னாட்டுக் கப்பல்கள் பதிவு செய்யாமல் கட்டுப்பாடற்ற முறையில் மீன் வளத்தைக் கொள்ளை அடிப்பதை இச்சட்டம் தடை செய்யும். மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறி கடல் மீன் வளச் சட்ட முன்வரைவை மத்திய அரசு நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது.

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் ‘கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)’ சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு உண்மையிலேயே நமது கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீனவர்கள் நலனுக்காகவும் சட்டம் இயற்றக் கருதினால் கடலோர மாநில அரசுகள் மற்றும் மீனவர் நலச் சங்கங்கள், மீனவ மக்கள் பிரதிநிதிகள் குழுவை அமைத்து, கருத்துகளைப் பெற்று சட்ட முன்வரைவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்''.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்