பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய்த் தொற்று ஒருபுறம் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் வருவாய் இழப்பு, விஷம் போல் ஏறிக்கொண்டு வரும் விலைவாசி உயர்வு என, பல்வேறு காரணிகள் தமிழக மக்களை வாட்டி வதைக்கின்றன. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இந்த விலைவாசி உயர்வுக்கு பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணமாக விளங்குவது தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்று சொன்னால் அது மிகையாகாது.

பெட்ரோல், டீசல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அச்சாணி. டீசல் விலை உயர்வின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதோடு மட்டுமல்லாமல் வாகனக் கட்டணங்கள் உயர்ந்து, அனைத்து வகைப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும்.

இந்த விலை உயர்வு காரணமாக, பாசனத்திற்காக டீசல் பம்ப் செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகள், சந்தைக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வியாபாரிகள், சாதாரண பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் திமுக தனது தேர்தல் அறிக்கையில், 'அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என்று அறிவித்தது.

திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், 12-06-2021 அன்று (இன்று) பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 ரூபாய் 43 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 ரூபாய் 64 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, திமுக அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை 4 ரூபாய் 28 காசாகவும், டீசல் விலை 4 ரூபாய் 99 காசாகவும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்த்திக்கொண்டே போவது என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும் என்றும், எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை குறைக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தக் கருத்தின் அடிப்படையிலும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்பவும், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்