அதிமுக ஆட்சியில் ஆவின் ஏற்றுமதி முடக்கம்: அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

By கே.சுரேஷ்

ஆவின் பால் உபபொருட்கள் ஏற்றுமதி செய்வது அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டுவிட்டன என, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள ஆவின் நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியுடன் இன்று (ஜூன் 06) ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:

"பால் லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின் நிர்வாகத்தில் அதிகமாக முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவினில் ஐஸ்கிரீம், நெய், பால்கோவா, மோர், தயிர் உள்ளிட்ட 152 வகையான பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.மேலும், பல பொருட்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

வெளிநாடுகளுக்கு ஆவின் உபபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது, கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டன. ஆவினுக்கென உலக அளவில் இருந்த தனிமரியாதையை அதிமுக அரசு கெடுத்துவிட்டது. விரைவில் வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு பால் உபபொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உற்பத்தியிலும், விற்பனையிலும் தலா 4 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் தினசரி பால் விற்பனையின் அளவு 12 லட்சம் லிட்டரில் இருந்து 15 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. வெளி மாநில பால் விற்பனையிலும் 1 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது.

தாய்ப்பாலுக்கு நிகரானது, கலப்படமற்றது ஆவின் பால்தான். எனவே, பொதுமக்கள் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை வாங்க வேண்டும். தனியார் பாலில் கலப்படம் போன்ற விதிமீறல் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கால்நடை தீவனம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பணியாளர்களுக்கு கரோனா ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நகர் பகுதிகளைப் போன்று கிராமப் பகுதிகளிலும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, பால்வளத் துறை ஆணையர் ஆர்.நந்தகோபால், எம்எல்ஏகள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்