என்.ஆர்.காங்கிரஸூக்குப் போட்டியாக பாஜகவும் சபாநாயகர் பதவியை குறி வைக்கிறது: புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு போட்டியாக பாஜகவும் சபாநாயகர் பதவியை குறி வைப்பதால் தேர்தல் அறிவிப்பில் சிக்கல் நீடிக்கிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களைப் பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி கடந்த மே 7-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அதையடுத்து. அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் பதவியேற்று 25 நாட்கள் ஆன நிலையிலும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

“முதல்வராக, பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் பெறும்போது நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் தங்களுக்குத் தர வேண்டும்” என பாஜக தரப்பு கூறுகிறது. ஆனால் ரங்கசாமியோ, 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை மட்டுமே பாஜகவுக்கு தர முடியும் என்கிறார். இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்திக்க மறுத்து, மேலிட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதலில் தகவல்கள் வெளி வந்தன. ஆனால், ரங்கசாமி தரப்பில் இருந்து யாரும் கட்சி மேலிடத்தில் பேசவில்லை என்று மாநில பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கரோனாவால் மக்கள் கடும் பாதிப்பில் உள்ள சூழலில் அமைச்சரவை அமையவில்லை. தொடர்ந்து ஆளுநர் தமிழிசை, அதிகாரிகள் கட்டுப்பாட்டில்தான் புதுச்சேரியில் ஆட்சி நடந்து வருகிறது.

"தற்காலிக சபாநாயகர் பொறுப்பேற்று ஒரு வாரம் ஆன நிலையில் இதுவரை சபாநாயகர் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அமைச்சரவையும் இல்லை, சபாநாயகரும் இல்லை. இதனால் சட்டப்பேரவை கூட்டப்படாமல் உள்ளது" என்று புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

"சபாநாயகர் பதவி மிக முக்கியமானது. என்.ஆர்.காங்கிரஸும், பாஜகவும் இப்பதவியை கேட்பதால் சபாநாயகர் தேர்தல் அறிவிப்பில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 6 தேர்வான எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸின் பலம் 10 ஆக உள்ளது. அமைச்சரவையில் உடன்பாடு ஏற்பட்டால்தான் சபாநாயகர் தேர்தல் நடக்கும்" என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்