தொற்றுப் பரவாமல் தடுக்க வீடு தேடி ரேஷன் பொருட்கள், நிவாரணத் தொகை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்களை அவரவர் இல்லங்கள் அருகே வழங்குவது போல் நியாயவிலைக் கடையின் மூலம் அத்தியாவசியப் பொருள்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும், இதன் மூலம் முழு ஊரடங்கு சரியாக அமலாகி தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தீவிர ஒரு வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏழு நாளில் காய்கறி, மளிகைக் கடைகள் என எதற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிவாரணத் தொகை பெறவும், ரேஷன் பொருட்களை வாங்கவும் தினமும் 4 மணி நேரம் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் போன்றவை அவரவர் இல்லங்கள் அருகேயே 10 பொருள்கள் அடங்கிய காய்கறித் தொகுப்பாக விற்பனை செய்யப்படுகிறது.

கரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த ஊரடங்கு நடவடிக்கையால் தற்பொழுது தொற்று எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் செய்திகள் வருகின்றன. இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை திறந்து இருக்கும்.

அச்சமயத்தில் நிவாரணத் தொகை ரூ.2,000 வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் இந்த மாதப் பொருள்களையும் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

தளர்வில்லாத ஊரடங்கை அறிவித்துவிட்டு மறுபுறம் நியாய விலைக் கடையில் பொருள்கள் பெறுவதற்காகத் தளர்வுகளை அறிவிப்பது, கரோனா பரவலை மேலும் அதிகரிக்குமே தவிர, எந்தவிதமான கட்டுக்குள்ளும் வராது. ஆகவே தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலம் எப்படி காய்கறிகளை அரசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதோ அதேபோல் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான பொருள்களைத் தொகுப்பாக வழங்க வேண்டும்.

அதோடு நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் எந்தந்தத் தேதிகளில் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று முன்னறிவிப்பாக கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் சுலபமாகவும் இருக்கும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதனால் நோய்த் தொற்றும் ஏற்படாது. ஏழை, எளிய, மக்களுக்கும் தேவையான இன்றியமையாத பொருள்கள் அவரவர் வீடுகளுக்கு அருகேயே கிடைக்கும். இதனால் அனைவரும் பயன்பெறுவார்கள். தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்து நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்