கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் தீவிரம்; அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை: உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை

By சி.கண்ணன்

கரோனா வைரஸ் தொற்று 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி, மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு இணையவழியில் அவர் அளித்த சிறப்பு பேட்டி:

கரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கிறதே? உருமாற்றத்துக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

வைரஸ் உருமாறுவது இயற்கைதான். அந்த மாற்றத்தால் மனிதர்களை வைரஸ் தாக்கும் வேகம் அதிகரிக்கிறதா? குறைகிறதா? என்பதே முக்கியம். பி.1.617 உருமாறிய வைரஸ் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே உருமாறிய வைரஸ் மனிதர்களுக்கான பாதிப்பை அதிகரிக்குமா, இல்லையா? என்பதைச் சொல்ல முடியும்.

உருமாற்றம் இருந்தாலும் வைரஸின் அடிப்படை மாறுவதில்லை. தற்போது வேகமாகப் பரவும் வைரஸின் வீரியம் குறித்த ஆராய்ச்சி தேவை. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதற்கு எதிராகசிறப்பாக செயல்படும். அடிப்படை சுகாதாரத்தை வலுப்படுத்துதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்றவற்றைப் பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது சரியான அணுகுமுறையா?

கரோனா வைரஸ் முதல் அலையின்போது நமக்கு எதுவும் தெரியாது. அதனால், பாதித்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். ஆனால், தற்போதுவைரஸ் குறித்து தெரிந்து கொண்டோம். 90 சதவீதம் பேர் லேசான மற்றும் மிதமானபாதிப்புடன் உள்ளனர். அவர்கள் வீட்டிலேயேதனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம். ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் போதுமானது.

தடுப்பூசி போடும் வேகம் திருப்தி அளிக்கிறதா?

ஒருசில நாடுகள் மட்டுமே 40 முதல் 50 சதவீத மக்களுக்கு 2 தவணை தடுப்பூசியை போட்டுள்ளன. இதன் பலன் கண்கூடாகத் தெரிகிறது. அந்த நாடுகளில் நோய் பரவல், இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து சகஜ நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போடுதல் மிக மந்தமாக நடக்கிறது. அந்தநாடுகளில் முதியோர், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கே இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. அத்தகைய நாடுகள் அடுத்தடுத்த கரோனா அலை குறித்துகவலைப்படும் நிலையில் உள்ளன. எவ்வளவு வேகமாக தடுப்பூசி செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே, பொருளாதார வளர்ச்சி சகஜ நிலைக்கு திரும்புவதும் அடங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட தடைகள் இருந்தாலும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிப்பது அவசியம்.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள், எத்தனை நாட்களுக்குப்பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்?

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். அவர்கள் 6 மாதத்துக்குப்பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், எத்தனை நாட்களுக்குப் பின் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்?

முதல் தவணை தடுப்பூசி போட்ட பிறகுகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது. 6 மாதத்துக்குப்பின் 2-ம் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.

கரோனா வைரஸ் முதல் அலையின்போது முதியவர்கள் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது, வைரஸின் 2-வது அலையில் நடுத்தர வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம்?

கரோனா வைரஸ் முதல் அலையில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதற்கு, அவர்களின் வயது மற்றும் இணைநோய் பாதிப்புகள் முக்கிய காரணம். இதைஉணர்ந்த அவர்கள், வெளியே செல்வதைத்தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர். கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபின்னரும், அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போடப்பட்டது. இதன்மூலம் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்தது. நடுத்தர வயதினர், வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. தடுப்பூசியிலும் முன்னுரிமை இல்லை. அதனால், நடுத்தர வயதினர் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

கரோனா வைரஸ் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும்?

இப்போது நாம் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். வைரஸ் எவ்வளவு காலம்இன்னும் இருக்கப் போகிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்றாகும். உலக மக்கள் தொகையில் 30 சதவீத மக்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுவிட்டால், நோயின் தீவிரத் தன்மையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

2022-ம் ஆண்டில் 60 முதல் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் இறப்புகள் வெகுவாகக் குறையும். மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால், வைரஸின் தாக்கம் குறையும் என்பது பற்றி இன்னும் துல்லியமாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அடுத்த 6 முதல் 18 மாதங்கள் மிகவும் முக்கியமானவை.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸைக் கண்டறிய‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையைவிட விரைவாக முடிவுகளை தெரிவிக்கும் ‘ஆன்டிஜென்’ துரித சோதனை பயன் அளிக்குமா?

‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனையுடன் ஒப்பிடும்போது துல்லியம் குறைவாக இருந்தாலும் ‘ஆன்டிஜென்’ துரித பரிசோதனையால் அதிக அளவில் பரிசோதனைகள்செய்ய முடியும். சிகிச்சையையும் விரைவாகத் தொடங்கலாம். கிராமப்புறங்களில் துரித பரிசோதனை மிகவும் பயன் அளிக்கும்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போதிய அளவு மனித வளம் உள்ளதா?

இந்தியாவில் போதிய அளவு மனித வளம்இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மனநல மருத்துவர்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பையும் பலப்படுத்த வேண்டும். செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரை இயக்க பயிற்சி பெற்றவர்கள் தேவை உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், அமெரிக்காவில்உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையுடன் இணைந்து ‘எக்கோ பிளாட்பார்ம்’ என்றமுறையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். அங்குள்ள மருத்துவ நிபுணர்களும், இங்குள்ள மருத்துவர்களும் சிகிச்சை முறைகுறித்து பரிமாறிக் கொள்கின்றனர். இதுபோன்ற புதிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தடுப்பூசி போட்டாலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது ஏன்?

அமெரிக்காவில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது நாட்டில் குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், ஓராண்டுக்குப் பிறகும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்