ஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து

By ஜெ.ஞானசேகர்

ஆல் பாஸ் அறிவிப்பால் கிடைக்கும் மாணவர்களின் பாராட்டு முக்கியமல்ல. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாவிடக் கூடாது என்பதே முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு அரசின் கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை வழங்கும் பணியை சட்டப்பேரவையின் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காவேரி நகர், காட்டூர் பர்மா காலனி, அரியமங்கலம் உக்கடை, திருச்சி கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வரகனேரி, மணப்பாறை தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி ஆகிய ரேஷன் கடைகளில் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும், திருவெறும்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்கள் 50 பேருக்கு தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

”ஆட்சியில் இல்லாத நேரத்தில் "ஒன்றிணைவோம் வா" என்ற பெயரில் மக்களுக்கு எவ்வாறு உதவிகள் செய்தோமோ, அதேபோல் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் நோக்கிலேயே திமுக சார்பில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா தீவிரம் அடைந்துள்ள நிலையில், மக்களுக்குத் தேவையான மருந்து, ஆக்சிஜன் ஆகியவை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அரசுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மக்களும் கரோனா தொற்றிவிடாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், மாணவ- மாணவிகள், கல்வியாளர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனையில், பிளஸ் 2 தேர்வைக் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றுதான் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினர். பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலையும்கூட.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அதற்காக மாணவர்கள் அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால், அது முக்கியமல்ல. ஏனெனில், அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தால், மாணவர்களை எந்தக் கல்லூரி சேர்த்துக் கொள்ளும். தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்பதைப் பல்கலைக்கழகங்களோ, நீதிமன்றமோ ஏற்காவிட்டால் என்ன செய்ய முடியும்?

மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவிடக் கூடாது என்பதே முக்கியம். இதன் காரணமாக மிகவும் யோசித்து கவனமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக எங்களது ஆலோசனைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவரது அறிவுறுத்தலின்படி ஊரடங்கு முடிந்த பிறகு நல்ல முடிவு அறிவிக்கப்படும்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பி.அப்துல் சமது (மணப்பாறை), முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புதுக்குடியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் தனியார் தொழிற்சாலையையும், திருச்சி என்ஐடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

41 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்