மின் கம்பி அறுந்து விழுந்து பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9.70 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்குன்றம் அருகே பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜவேலு (40). இவர் அரிசி மண்டி வைத்துள்ளார். இவரது மனைவி காவேரி (35). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி வழக்கம்போல், மகனைப் பள்ளிக்கு அனுப்புவதற்காகத் தயார் செய்த காவேரி, பள்ளி வேனுக்காக வீட்டிற்கு வெளியே மகனுடன் காத்திருந்தார்.

அவருடன் கணவர் ராஜவேலு, அவரது தாயார் பத்மா (60) ஆகியோரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த மின்சார வயர் அறுந்து காவேரி, அவரது மகன், மாமியார் பத்மா ஆகியோர் மீது விழுந்தது.

இதில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காவேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மகன், மாமியார் பத்மா மீது மின்வயர் உரசியதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது மின்சார வாரியத்தின் அலட்சியத்தாலேயே நடந்தது. இதற்கு முன்னர் இதேபோன்று கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் உயிரிழந்தபோது இற்றுப்போன கம்பிகளை மாற்றச் சொன்னோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததன் விளைவே இந்த விபத்து எனப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் செய்தி தமிழ் நாளிதழ்களில் வெளியானது.

இச்சம்பவம் தொடர்பாக நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

ஏற்கெனவே அதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் உயிரிழந்ததாகவும், இது சம்பந்தமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குப் புகார் அளித்தும், பலவீனமான மின் கம்பியை மாற்றாததால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் கூறி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், இந்த விபத்துக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அஜாக்கிரதையும், கவனக் குறைவுமே காரணம் எனக் கூறி, பலியான காவேரியின் கணவர் ராஜவேலுவுக்கு 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை நான்கு வாரங்களில் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மின் கம்பிகள் பராமரிப்பில் விழிப்புடன் இருக்கும்படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

28 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்