ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கரோனா தொற்றால் உயிரிழப்பு: ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர்

By செய்திப்பிரிவு

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் பல அரிய உயிர்களைப் பறித்து வருகிறது. ஏழை, பணக்காரர் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கரோனா தொற்று காரணமாக முன்னாள் சிபிஐ அதிகாரியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியுமான ரகோத்தமன் (72) உயிரிழந்தார். சென்னை முகப்பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

ரகோத்தமன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, அண்ணாமலை நியூஸ் என்ற வார இதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் சிபிஐயில் சப் இன்ஸ்பெக்டராக இணைந்து பணியாற்றினார். அந்த நேரத்தில் மவுண்ட் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து அறிய ஓராண்டு பணியாற்றியுள்ளார்.

ரகோத்தமன் 36 ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றினார். அதில் லஞ்ச ஒழிப்பு, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். அதில் குறிப்பிடத்தக்கது, ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக கார்த்திகேயனுக்குக் கீழ் பணியாற்றியது எனலாம். 10 ஆண்டுகள் இந்த வழக்கை அவர் விசாரித்துள்ளார்.

சிபிஐயில் பணியாற்றிய காலத்தில் 1988ஆம் ஆண்டு மெச்சத்தகுந்த பணிக்காகவும், 1994இல் ஜனாதிபதி பதக்கமும் பெற்றுள்ளார். 2004இல் ஓய்வுக்குப் பின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாகத் தான் பணியாற்றிய அனுபவத்தை வைத்துப் புத்தகம் ஒன்று எழுதினார். அந்தப் புத்தகத்துக்கு, “ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்” என்று பெயரிட்டிருந்தார். அதேபோல் "Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files" என்ற ஆங்கிலப் புத்தகத்தையும் அவர் எழுதி வெளியிட்டார்.

புத்தகத்தில் அவர் எழுதிய பல விஷயங்கள் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தின. ஊடக விவாதங்களில் பங்கேற்று புலனாய்வு, வழக்குகள் குறித்து கருத்துகளைக் கூறி வந்தார்.

சிபிஐயில் 1968ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராகப் பணியில் இணைந்த ரகோத்தமன் தனது அயராத உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 2004ஆம் ஆண்டு எஸ்.பி. அந்தஸ்தில் ஓய்வு பெற்றார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். மகள் பிரியதர்ஷினி திருமணமாகி அரியலூரில் வசிக்கிறார். ரகோத்தமன் சென்னை கே.கே.நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் உடல் நலன் பாதிக்கப்பட்டதை அடுத்து முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு காலமானார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான மாமண்டூருக்குக் கொண்டு செல்லப்பட்டு சுகாதாரத் துறையினரால் அடக்கம் செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்