மதுரை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை 90% அதிகரிப்பு: ‘ஸ்டெர்லைட்’ உற்பத்தியில் மதுரைக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அனைவருமே சிகிச்சை பெறுவதால் ‘ஸ்டெர்லைட்’ ஆலை ஆக்சிஜன் உற்பத்தியில் மதுரைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஆட்சியர், தமிழக அரசிடமும், தூத்துக்குடி ஆட்சியரிடமும் ஆலோசித்து வருகிறார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனையில் கரோனா சிகிச்சைக்காகத் தற்காலிகமாக ரூ.350 கோடியில் கட்டிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்காக 1,100 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. 250 சாதாரணப் படுக்கைளும் உள்ளன.

இதுதவிர மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மதுரை மட்டுமில்லாது விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

தற்போது கரோனா தொற்றில் உயிருக்குப் போராடும் தீவிரமான நோயாளிகள் அனைவருமே, உடனடியாகத் தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றனர். அதனால், தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் மட்டுமே 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். அதனால், ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிவதால் நோயாளிகள், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனை அளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் படுக்கை வசதியில்லை. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் கேட்கிற கட்டணம் கொடுத்து சிகிச்சை பெறத் தயாராக இருந்தும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைப்பதில்லை. அதனால், ஒட்டுமொத்த நோயாளிகளும் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை முற்றுகையிடுவதால் ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகளுக்கு உடனுக்குடன் படுக்கைகள் கிடைப்பதிலும், அவர்கள் தடையின்றி சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அவர் அரசு ராஜாஜி மருத்துமவனை டீன் சங்குமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின் ஆட்சியர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”எந்தெந்த வகையில் ஆக்சிஜன் சேவையை துரிதமாகச் செயல்படுத்த முடியுமோ அதைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் நோயாளிகளுக்குக் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரையில் ஆக்சிஜன் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால், ஆக்சிஜனை வீணாகாமல் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 26 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

தற்போது வரை அது தடையில்லாமல் கிடைக்கிறது. ஆனால், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு கரோனா பாதிப்பு இல்லை. கடைசி பாதிப்பாகவே மூச்சுத் திணறல் வந்தது. ஆனால், தற்போது நோயாளிகளுக்கு ஆரம்பத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனால், பாதிக்கப்படுகிற அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவர்கள் அரசு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பல இடங்களில் இருந்து மதுரை மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் மதுரைக்கு முக்கியத்தும் கொடுத்து வழங்க அங்குள்ள ஆட்சியரிடம் பேசி வருகிறோம். ஏனெனில் மதுரை அரசு மருத்துவமனையில், மதுரை மட்டுமில்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் அதிக அளவு சிகிச்சை பெறுவதால் அந்த உரிமையில் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் கூடுதலாக மதுரைக்குக் கேட்கிறோம்.

தற்போது மதுரையில் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆக்சிஜன் தேவை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனாலே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. ஆனாலும், நோயாளிகளை அலைக்கழிக்காமல் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும்போது அந்தப் படுக்கைகள் அடுத்ததாக சிகிச்சைக்குக் காத்திருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்