வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டால் பாமகவுக்கு பலன் கிடைத்ததா?

By செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கான 10.5 சதவீதஇடஒதுக்கீட்டை பாமகவுக்கு போராடி பெற்றது. இந்த இடஒதுக்கீடு தேர்தலில் பாமகவுக்கு கை கொடுத்துள்ளதா, இல்லையா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

வடமாவட்டங்களில் கனிசமான வாக்கு வங்கிகளை வைத்துள்ளது பாமக. ஆரம்பத்தில் இருந்து அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தல்களை பாமக சந்தித்து வந்தது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின், ஆட்சியை பிடிப்பதற்காக இனிமேல் எந்த காலத்திலும் அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்தோடு பாமக தனித்து சந்தித்தது. ஆனால், போட்டியிட்ட 232 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி அடைந்தது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் தோல்வி அடைந்தார். 1991-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் இடம்பெற்று வந்தனர். தனித்து போட்டியிட்டதால் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை பாமகவுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, மீண்டும் அதிமுகவுடன் இணைந்து பாமக செயல்படத் தொடங்கியது. வடமாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கை அதிகரிக்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும், இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் முடிவு செய்தனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு 5 மாதத்துக்கு முன்பு வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினையை கையில் எடுத்தது பாமக.வன்னியர்களுக்கு கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் 20 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மறைமுகமாக ராமதாஸ் எச்சரித்தார். வடமாவட்டங்களில் பலமாக உள்ள பாமகவை கூட்டணியில் தக்க வைக்க, பேச்சுவார்த்தைக்குப்பின், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (எம்பிசி) 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதன்மூலம் வடமாவட்டங்களில் பாமக, அதிமுகவை வன்னியர்கள் கொண்டாடினர். அதேநேரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு பல்வேறுசமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு வரத்தொடங்கியது. அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட மூத்தஅமைச்சர்கள் தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர். இது தற்காலிக இடஒதுக்கீடு தான் என்று அமைச்சர்கள் சொல்லி சமாளித்தனர். பல தரப்பு எதிர்ப்பையும் மீறி கடுமையான அரசியல் முடிவை எடுத்து வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய அதிமுக கூட்டணிக்கு வடமாவட்டங்கள் தேர்தலில் பெரிய அளவில் கை் கொடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம் இடஒதுக்கீட்டை கொண்டுவர அதிக முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரும் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

23 தொகுதிகளில் போட்டி

பாமக போட்டியிட்ட 23 தொகுதிகளில் தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், மயிலம், சேலம் மேற்குஆகிய 5 இடங்களில் மட்டும்வெற்றி பெற முடிந்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 37 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டும்அதிமுக கூட்டணியால் வெற்றிபெற முடிந்தது.

விழுப்புரத்தில் 7 தொகுதிகளில் மூன்றிலும், கடலூரில் 9 தொகுதிகளில் மூன்றிலும், கள்ளக்குறிச்சியில் 5 தொகுதிகளில் ஒன்றிலும்அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதேபோல், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்கள் அதிமுகவுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டம் மட்டும் அதிமுக கூட்டணிக்கு கைக்கொடுத்தது.

தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகள் மற்றும் சேலத்தில் சேலம் வடக்கு தவிர 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 10.5 சதவீத இடஒதுக்கீடு அதிமுக பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும், பாமகவுக்கு ஓரளவு கை கொடுத்துள்ளது. கடந்த முறை ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் இல்லாமல் இருந்த பாமகவுக்கு, இப்போது 5 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

குறைந்த வாக்கு சதவீதம்

வடமாவட்டங்களில் தனது வாக்கு வங்கியை தொடந்து தக்க வைத்து வந்தது. ஆனால், இந்த தேர்தலில் 5 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1991 தேர்தலில் 5.9%, 1996 தேர்தலில் 3.8%, 2001 தேர்தலில் 5.6%, 2006 தேர்தலில் 5.6%, 2011 தேர்தலில் 5.2%, 2016 தேர்தலில் 5.4% வாக்குகளை பாமக பெற்றிருந்தது. இந்த தேர்தலில் 4 சதவீதம் வாக்குகளை மட்டும் பாமக பெற்றுள்ளது குறிப் பிடத்தக்கது.

செல்வாக்கு குறையவில்லை

இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பாமக 23 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதில், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறைவான இடங்களில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது. இன்னும் கூடுதல்இடங்களில் போட்டியிட்டு இருந்தால் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கும். வடமாவட்டங்களில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் பாமகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்