சிறுமியின் உணவு குழாயில் சிக்கிக் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை அகற்றிய மருத்துவர்கள்

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றரை வயது சிறுமி விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் மருத்துவ குழுவினர் அகற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த குபேரபட்டினம் கிராமத்தில் வசிப்பவர் போஜன். சென்னையில் பொக்லைன் இயந்திரம் ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுமதி. விவசாய கூலி தொழிலாளி. இவர்களது மூன்றரை வயது மகள் தனுசுயா. இவர், வீட்டில் வியாழக்கிழமை அன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளார்.

இதையறிந்த சுமதி, தனது மகளை அழைத்து வந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாலை 5 மணியளவில் அனுமதித்தார்.

இதையடுத்து காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்கள் பொ.சிந்துமதி மற்றும் எம்ஆர்கே ராஜாசெல்வம் ஆகியோர், எக்ஸ்ரே மூலம் சிறுமியை பரிசோதித்தனர். அதில், தொண்டையில் இருந்து செல்லும் உணவு குழாய் பாதையில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது. சிறுமியின் வயிற்றில் உணவு மற்றும் தண்ணீர் இருந்ததால், உடனடியாக சிகிச்சையை தொடங்கவில்லை.

30 நிமிட போராட்டம்

மேலும், சிறுமியை 5 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். சிறுமியின் சுவாசம் சீராக இருந்துள்ளது. அதன்பிறகு, அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார். மயக்க மருந்தியல் மருத்துவர் திவாகர் மூலம் சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, எண்டோஸ்கோப் சிகிச்சை மூலமாக சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு உணவு குழாய் பாதையில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். சிறப்பு மருத்துவர்களுடன் செவிலியர் அனு, மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர் ஜமுனா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சந்துரு, குமரன் ஆகியோர் உடனிருந்து செயல்பட்டுள்ளனர்.

உண்ண முடியாமல் தவிப்பு

இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் சிறப்பு மருத்துவர்கள் பொ.சிந்துமதி மற்றும் எம்ஆர்கே ராஜாசெல்வம் கூறும்போது, “மூன்றரை வயது சிறுமி, 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாக, மருத்துவமனைக்கு அவரது தாயார் வியாழக்கிழமை மாலை அழைத்து வந்தார். சிறுமியை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ததில், உணவு குழாயில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது.

உணவு குழாயில் சிக்கிக் கொண்டதால், சிறுமியால் தண்ணீர் குடிக்கவும், உணவு உட்கொள்ளவும் சிரமப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் சுவாசம் சீராக இருந்தது. இதையடுத்து, அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று, மயக்க மருந்து செலுத்தி, எண்டோஸ்கோபி சிகிச்சை மூலமாக உணவு குழாயில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை வெளியே எடுத்தோம்.

உடனடி சிகிச்சையால் மீட்பு

கரோனா தொற்று பரவல் உள்ள சூழ்நிலையில், சிறுமி மற்றும் அவரது தாயாரின் நிலையை கருத்தில் கொள்ளவில்லை. கால அவகாசமும் இல்லாததால், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டிய முடிவுக்கு நாங்கள்(மருத்துவர்கள்) செல்லவில்லை. உடனடி சிகிச்சை தேவை என்பதால், அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து சிறுமியை காப்பாற்றி உள்ளோம். குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சில நேரங்களில் உடனடி சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இதேபோல், தென்னம் பிஞ்சை விழுங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழைத்து வரப்பட்ட ஒன்றரை வயது சிறுவன் ரோஹித்தை LARYNGO SCOPE முறையில் சிகிச்சை அளித்து காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் ராஜாசெல்வம் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்