இருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு மருந்து பூசிய பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: தமிழக அரசு மருத்துவமனைகளில் முதல் முறை

By க.சக்திவேல்

இருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யாமல், மருந்து பூசிய பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல் முறையாக, கோவை அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா இன்று (ஏப்.21) கூறியதாவது:

''கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த 55 வயது நபருக்குக் கடந்த 2018-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால், அடைப்பைச் சரிசெய்ய கோவை அரசு மருத்துவமனையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மற்றொரு முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, இருதயவியல் துறைத் தலைவர் டி.முனுசாமி, டாக்டர் ஜெ.நம்பிராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்த்தனர்.

அதில், முன்பு வைக்கப்பட்ட ஸ்டென்ட்டின் விட்டம் 90 சதவீதத்துக்கும் அதிகமாகச் சுருங்கி இருந்தது தெரியவந்தது. பொதுவாக ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்களில் நூற்றுக்கு 12 சதவீத நோயாளிகளுக்கு ஸ்டென்ட்டுக்குள் திசுக்கள் வளர்ந்து இதய ரத்தக் குழாய் சுருக்கம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்குச் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்று சுருக்கம் ஏற்படுபவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுகிறது.

அவர்களுக்கு ரத்தக் குழாய் அடைப்பை நீக்க மற்றொரு ஸ்டென்ட் பொருத்த வேண்டும் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர்க்க, நோயாளிக்கு சிரோலிமஸ் மருந்து பூசப்பட்ட பலூன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின்போது முன்பு வைத்த ஸ்டென்ட்டில் ஏற்பட்ட சுருக்கம் விரிவுபடுத்தப்பட்டு, ரத்தக் குழாயின் உட்புறத்தில் மருந்து பூசப்பட்டது. இதனால், எதிர்காலத்தில் திசுப் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, மீண்டும் அடைப்பு ஏற்படாது.

இவ்வாறு இருமுறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு மற்றொரு ஸ்டென்ட் வைக்காமல், மருந்து பூசப்பட்ட பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிப்பது தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இதுவே முதல் முறையாகும். சிகிச்சை முடிந்து அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்பியுள்ளார்''.

இவ்வாறு டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

சுற்றுச்சூழல்

41 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்