வரும் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்; தமிழக அரசு உத்தரவு: முழு விவரம்

By செய்திப்பிரிவு

வரும் 20-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடராக, தமிழக அரசு இன்று (ஏப். 18) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது.

கரோனா நோய் பரவல் நிலை, தற்போது அதிகரித்து வரும் நிலையிலும், வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளி மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையிலும், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டும், கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், பொது இடங்களில், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும், சமீபகாலத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக 28.3.2021 அன்று, 13 ஆயிரத்து 70 நபர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 17.4.2021 அன்று கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் 12.4.2021 அன்று தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக நிலவும் சூழ்நிலையினை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, நிலைமையினை தொடர்ந்து கண்காணித்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கி வருகிறது.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், முதல்வர் இன்று (18.4.2021) தனது முகாம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு:

* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

* தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

* மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம் / ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

58 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்