நடைமுறைக்கு வராத இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

By செ. ஞானபிரகாஷ்

கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் முக்கிய விஷயங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் இந்த கல்வியாண்டாவது நடைமுறைக்கு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. கடந்த 1.4.2010-ல் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 8.11.2011-ல் இந்த சட்டத்தை அமல்படுத்தியது. இதுவரை நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதனால் தனியார் நடத்தும் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க முடியும்.

ஆனால் புதுச்சேரியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இது வரை நடைமுறையில் இல்லை. ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் பள்ளியில் இடம் தருவதில்லை. கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றாததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஏழை குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பு இல்லை. இதுபற்றி பெற்றோர் தரப்பில் விசாரித்த போது, “தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் அமலாகாததால் ஏழை குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடம் தரப்படுவதில்லை.

இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கல்வித்துறையில் மலர்வளையம் வைப்பதுதொடங்கிபலவித போராட்டங்கள் நடந்துள்ளன.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தை ஆண்டுதோறும் நடைமுறைப் படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது வரை நிறைவேற்றவில்லை. சில அரசியல்வாதிகளும் பள்ளிகள் நடத்துகின்றனர். நடவடிக்கையில்லாததற்கு அதுவும் ஓர் காரணம். தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பதால் ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் நல்லது” என்று குறிப்பிடுகின்றனர்.

கல்வியாளர்கள் தரப்பில் கூறுகையில், “தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் சேர்க்கை மே மாதம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால், புதுச்சேரி நிலையோ தலைகீழாக உள்ளது. கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றுவதாக புதுச்சேரி அரசு குறிப்பிடும் சூழலில் ஏன் இதுபோன்ற நல்ல விஷ யங்களை நடைமுறைப்படுத்தாமல், கண்டு கொள்ளாமல் உள்ளனர்?” என்றனர்.

இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரங் களில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் தனியார் நிர்வாகத்தின் கீழ் 49 தொடக்கப் பள்ளிகள், 56 நடுநிலைப் பள்ளிகள், 107 உயர்நிலைப் பள்ளிகள், 73 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.

புதுச்சேரி அரசு சார்பில் கடந்த 27.10.2011-ல் இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் மட்டும் அரசிதழில் ஆணையாக வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் சட்டமோ, அரசாணையோ இதுவரை வெளியாகவில்லை.

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்தாலும் தனியார் பள்ளிகளுக்கு இதை பின்பற்ற 3 ஆண்டுகாலம் அவகாசம் அளிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் இருந்து அனைத்து தனியார் பள்ளிகளும் இச்சட்டப்படி செயல்பட்டிருக்க வேண்டும்.

இதனை ஏற்று புதுச்சேரி அரசு கடந்த 24.10.2011 அன்று புதுச்சேரி குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி விதிகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இன்று வரை இச்சட்டத்தின் விதிமுறைகளை அரசு நிறைவேற்றவில்லை. தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி இருப்பதால் ஆளுநர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்