காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் கூட்டம்: பரிசோதனைக்கு பிறகே விமானநிலையத்தில் அனுமதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே செல்லவோ, வெளியேறவோ அனுமதிக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் தலைமையில் கரோனா ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, "நடமாடும் வாகனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 97,697 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. பொது இடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவர பின்பற்றா விட்டால் சீல் வைக்கப்படும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) க.லோகநாயகி, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சவ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராணி, துணை இயக்குநர் ஜவஹர்லால் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகக்கவசம் கட்டாயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆட்சியர் பேசும்போது, "பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். இதை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடும் கலாச்சார, வழிபாட்டு தலங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும். தனி நபர் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடும்போதும், வரிசையில் நிற்கும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்" என்றார்.

100 பரிசோதனை முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயில் நிருபர்களிடம் கூறியது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு முறைகளை சரியாக பின்பற்றி தேர்தலை நடத்தியுள்ளோம். கரோனா தொற்று அதிகரிப்பதால் 100 பரிசோதனை முகாம்கள் தினமும் நடத்தப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள 145 நோய் தடுப்பூசி மையங்கள் முலம் சுமார் 1000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைக்கு பின்னரே பயணிகள் வெளியே வரவும், உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படுவர் என்றார்.

இந்தக் கூட்டத்துக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் தாம்பரம் பகுதியில் நடைபெற்று வரும் கரோனா பரிசோதனை முகாம்களை ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

15 mins ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்