ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது: பெருந்துறையில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது என பெருந்துறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை பகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

கொங்கு மண்டலத்தில் அதிமுக காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் பொய்யான, அவதூறான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அதிமுக வலிமையான இயக்கம். உயிரோட்டமான இயக்கம். எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது. கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுக கோட்டையாக இருக்க வேண்டும்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நான் முதல்வராக தேர்வு பெற்று, ஆளுநர் உத்தரவுப்படி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்தேன். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். புனிதமான சட்டப்பேரவையிலேயே அராஜகம்செய்த திமுகவினர் கையில் நாட்டைக் கொடுத்தால், என்ன செய்வார்கள்?

திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எம்.ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டனர். பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவிடம் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்? திமுக எம்.பி. ஆ.ராசா, தயாநிதி மாறன் திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை, தலைவர்களை தரக்குறைவாக பேசுகின்றனர்.

இவர்கள் ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? அராஜக கட்சியான திமுகவிற்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக ஸ்டாலின் பொய்யான கருத்தைக் கூறி வருகிறார். டெண்டர் விடப்படாத, நடக்காத திட்டத்தில் ஊழல் நடந்ததாக என்மீது ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கே மேடை போட்டு நேருக்குநேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்குவர். அதேபோல், திமுக ஆட்சியில் நடந்த தவறுக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. உண்மை, தர்மம், நீதிதான் வெல்லும்.

ஈரோடு மாவட்டத்தில் 61 அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த 29 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த அவிநாசி-அத்திக்கடவு திட்டம், நொய்யல் சீரமைப்பு, காலிங்கராயன், கொடிவேரி, கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு என பல பணிகள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

குமாரபாளையத்தில் பிரச்சாரம்

குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பி.தங்கமணியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

விசைத்தறி தொழில் சிறக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசைத்தறி தொழிலாளர்களுக்கு பத்தாயிரம் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். குமாரபாளையம் நகரத்தில் வீடில்லா மக்களுக்கு நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் கஷ்ட காலத்தில் மக்களுக்கு 1 ரூபாய் கொடுத்திருப்பார்களா. அவர்களுக்கு எடுத்து தான் பழக்கம். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கட்சி அதிமுக. பெண்களை இழிவு படுத்தும் கட்சி திமுக. கடந்த 4 ஆண்டு 2 மாத ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2006-2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்று வந்தது. இதனால் விசைத்தறி தொழில் உள்பட அனைத்து தொழில் வளமும் பாதிக்கப்பட்டது. தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பிரிவு சாலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

27 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

51 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்