பூரண மதுவிலக்கு, விவசாய கடன் தள்ளுபடி,மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

பூரண மதுவிலக்கு, அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் வந்தியத் தேவன், தேர்தல் பணிச் செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

மாநில அரசுகளுக்கான உரிய அதிகாரங்களை மீட்கவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு, தனியார் துறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்படும். அதேபோல், தேசிய மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும். சிறு, குறு விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை அடிப்படை ஆதரவு விலையுடன் கொள்முதல் செய்ய தனிச்சட்டம் இயற்றப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, காவிரி படுகை நிலப்பகுதிகள் பாதுகாக்கப்படும்.

சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடவும், பயிர் காப்பீடுத் திட்டத்தை சீர்படுத்தவும் வலியுறுத்தப்படும். நம்மாழ்வார் பெயரில் தனி துறை தொடங்கி, இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்து, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். திருப்பூரை ஜவுளித்துறை மண்டலமாக அறிவிப்பதுடன், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை காப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். என்எல்சி நிறுவனம் பொதுத்துறையாக நீடிக்கவும், தொழிலாளர் நலனுக்கு எதிரான அனைத்து சட்டங்களை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு நீக்கப்படுவதுடன், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும் வலியுறுத்துவோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதோடு, நீட் தேர்வும் ரத்து செய்யப்படும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், வணிகர் நலனை உறுதிசெய்ய ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, நலவாரியத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை தமிழர் படுகொலைக்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோருவதுடன், இலங்கை தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்று பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தப்படும்.

மேலும், தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு வழங்குவது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தடை விதிப்பது, 7 பேர் விடுதலைக்கு வலியுறுத்தல், தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

234 தொகுதிகளிலும் வெற்றி

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: மதிமுக அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை திமுக நிச்சயமாக நிறைவேற்றும். அதற்கான அழுத்தத்தை மதிமுக வழங்கும்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக மக்களிடம் நல்வரவேற்புள்ளது. எனவே, சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியானது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்கு பக்கபலமாக மதிமுக துணைநிற்கும்.

மாறுபட்ட கருத்துகளை கொண்ட கட்சிகள் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தற்போது மாநில உரிமை, சமூகநீதியை காக்க திமுகவுடன் சேர்ந்து பயணிக்கிறோம். மத்திய பாஜக அரசு தனது இந்துத்துவா கொள்கைகளை திணிக்க முயற்சித்து வருகிறது. அதற்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்கிறது. எனவே, அந்த கூட்டணியை மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

ஓடிடி களம்

22 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்