கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்: சங்க பதிவாளர் உத்தரவு

By செய்திப்பிரிவு

கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரை அடகு வைத்து பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி என்ற அறிவிப்பை தொடர்ந்து, பொது நகைக்கடன் நிலுவை தொடர்பாக வங்கிகளிடம் கூட்டுறவுத் துறை விவரங்களை கோரியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.26-ம் தேதி விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘கரோனா காலத்தில் ஏற்பட்ட குடும்ப நிதி நெருக்கடியை சமாளிக்க ஏழை, எளிய மக்கள், விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களில் தாங்கள் பெற்ற நகைக்கடனை திரும்ப செலுத்துவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கரோனா தொற்று ஓரளவு குறைந்துள்ள போதிலும், இயல்பான பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக மீளவில்லை.

விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய குடும்பங்கள் நகைக்கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள், மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த ஜன.31-ம் தேதி நிலுவையில் உள்ள பொது நகைக்கடன் விவரங்களை அனுப்ப வேண்டும். தலைமை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், அதற்கான உரிய படிவத்தில் பதிவாளர் அலுவலகத்துக்கு குறுந்தகட்டில் பதிந்தும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்க வேண்டும்.

அதேபோல, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப் பதிவாளர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்