காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்த கர்நாடக மாநில அனுமதி தேவை இல்லை: வைகோ

By செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை, தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றுவதற்காக இத்திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் அறிவித்து இருக்கின்றார்.

இந்நிலையில், புதுடில்லியில் இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பேசும்போது, “காவிரி ஆற்றின் மிகை நீரைப் பயன்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம்” என்று தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடக பாஜக அரசின் முதல்வர் எடியூரப்பா, “தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதை தடுத்து நிறுத்துவோம்” என்று கொக்கரித்துள்ளார்.

அதைப்போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, “தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும்” என்று அவர் பங்குக்குத் தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் கர்நாடக அரசு, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காவிரியின் குறுக்கில், மேகேதாட்டு தடுப்பு அணை அமைக்க முனைந்துள்ளது. இதன் மூலம் 67.16 டி.எம்.சி. நீரைச் சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கும், அணை நீரைப் பயன்படுத்தி 400 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களை மீறி 1965 ஆம் ஆண்டிலிருந்து அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்துவிட்டது. ஸ்வர்ணவதி, ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர், வருணா கால்வாய், யாகச்சி போன்ற அணைகள் கட்டியும், நீர்ப் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்த கர்நாடக மாநிலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை புதிதாக உருவாக்கி பாசனப் பரப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

1974-ல் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு வெறும் 6.8 லட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991 இல், அளித்த இடைக்கhலத் தீர்ப்பில், கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக் கூடாது என்று தெரிவித்தது. ஆனால் அதன் பின்னரும் கர்நாடகம் பாசனத் திட்டங்களை விரிவுபடுத்தியது.

2007-ல் நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தபோது, பாசனப் பரப்பு 18.8 இலட்சம் ஏக்கராக உயர்ந்துவிட்டது. அதன் பின்னர் தற்போது 13 ஆண்டுகளில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 21 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது. இதனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 30 இலட்சம் ஏக்கராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதில் ஒரு பகுதியாக மேகேதாட்டு அணைத் திட்டத்தை உருவாக்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன? 1971 இல் காவிரிப் படுகைப் பகுதிகளில் 25.03 ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு, தற்போது 16 இலட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும்”.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்