மணியாச்சி அருகே சுமை ஆட்டோ ஓடையில் கவிழ்ந்து விபத்து: சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் பலி

By எஸ்.கோமதி விநாயகம்

மணியாச்சி அருகே சுமை ஆட்டோ காற்றாற்று ஓடையில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 பெண் விவசாயத் தொழிலாளர்கள் சுமை ஆட்டோவில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்காக வந்தனர்.

ஆட்டோவைத் திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை(50) என்பவர் ஓட்டினார். இதில், 15 பேர் மணியாச்சி பகுதி நிலங்களில் நடைபெறும் பணிக்கும், 16 பேர் புதியம்புத்தூர் அருகே சவரிமங்கலத்தில் நடைபெறும் பணிக்கும் அழைத்து வரப்பட்டனர்.

மணியாச்சி காவல் நிலையத்துக்கு முன்பு சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ‘எஸ்’ வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி, காற்றாற்று ஓடையில் கவிழ்ந்தது. ஓடையில் அதிக அளவு தண்ணீர் இல்லையென்றாலும், சுமை ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்த நிலையில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால், அனைவரும் இடுபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், மூச்சுத் திணறி திருநெல்வேலி மாவட்டம் மணப்படை வீடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள் (30), சுடலை மனைவி ஈஸ்வரி (27), கணேசன் மனைவி மலையரசி (48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள் (54), வேலு மனைவி கோமதி (65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா மற்றும் மணியாச்சி உட்கோட்டக் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுமை ஆட்டோவை மீட்டு, அதன்கீழ் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர்.

சுமை ஆட்டோ ஓட்டுநர் சித்திரை

விபத்தில், திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் (65), சுந்தரம் மனைவி செல்லத்தாய் (60), மாரியம்மாள் (50), மகாராஜன் மனைவி லிங்கம்மாள் (35), பேச்சியம்மாள் (30), மணிகண்டன் மனைவி விஜி (36) உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மணியாச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுமை ஆட்டோ ஓட்டுநர் சித்திரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் மானாவாரி நிலங்களில் நடைபெறும் விவசாயப் பணிகளுக்குப் பெரும்பாலும் தொழிலாளர்கள் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துதான் அழைத்து வரப்படுகின்றனர். இதில், அவர்கள் சுமை வாகனங்களில் அழைத்து வரப்படுவது வழக்கமாக உள்ளது. அதிலும், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றி வரும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. எனவே, விவசாய கூலித்தொழிலாளர்களை வேன் அல்லது போக்குவரத்துக்கு உரிய பணம் கொடுத்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கலாம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்