சென்னை அரசு அருங்காட்சியகத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தர புத்தகக் காட்சி’- அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தர புத்தகக் காட்சி' அரங்கை அமைச்சர் க.பாண்டியராஜன் நேற்று திறந்துவைத்தார்.

நூல்கள் பதிப்பு தொழிலில் ஈடுபட்டு வருவோர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2004-ம் ஆண்டு, அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் ‘நிரந்தர புத்தகக் காட்சி' அமைப்பதற்கான அரங்கத்தை ஒதுக்கித் தந்தார். அப்போது முதல் சுமார் 3 ஆயிரம் தலைப்புகளில் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களுடன் அந்த புத்தகக் காட்சி இயங்கி வந்தது.

புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தர புத்தகக் காட்சி' அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று, புத்தகக்காட்சி அரங்கை திறந்துவைத்து, அதில் இடம்பெற்ற நூல்களை பார்வையிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புத்தகங்களை மிகவும் நேசித்தவர். அவரது வேதா இல்லத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் மிக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பார்வையிட வரும் 28-ம் தேதி திறக்கவாய்ப்புள்ளது. அங்கு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், முக்கிய நிகழ்வுகள் குறித்த காட்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். அதற்கான தேதியை முதல்வர் அறிவிப்பார்.

நூல்களின் முக்கியத்துவத்தை அறிந்த அவர், ‘நிரந்தர புத்தகக் காட்சி' அமைப்பதற்கான அரங்கை வழங்கியுள்ளார். மெரினாவில் உலகத்தரத்தில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்க உள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளை மின்னாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, அந்தப் பணிகளை செய்ய தமிழகத்தில் ஒருவரும் இல்லை. வட மாநிலத்தில் இருப்போருக்கு ரூ.4 கோடி மதிப்பிலான அந்த பணி கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் மின் பதிப்பில் மிகப்பெரிய நிறுவனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் நடத்துகிறார். தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அதைதடுக்க முடியாது. தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தொழிலை மாற்றிக்கொள்வது சிறந்தது. நூல் பதிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் மின் பதிப்புக்கு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

30 ஆயிரம் தலைப்புகள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் பேசும்போது, ‘‘இந்த புத்தகக் காட்சி 30 ஆயிரம் தலைப்புகளுடன் ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும் புத்தக விற்பனை நிலையமாக செயல்படும். உலகில் வேறு எங்கும் இத்தனை தலைப்புகளுடன் தமிழ் நூல்கள் கிடைக்காது. ஆண்டு முழுவதும் நூல்களுக்கான விலையில் 10 சதவீதம் கழிவும் வழங்கப்படும். வருங்காலத்தில் கைபேசி செயலி வழியாக விற்பனை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புத்தகக்காட்சி வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும்வருவோருக்கு ஒரே இடத்தில் அனைத்து விதமான புத்தகங்களையும் சிரமம் இன்றி வாங்க உதவியாக இருக்கும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் பபாசி செயலர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஜி.கோமதிநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

1 min ago

சினிமா

19 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

13 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

27 mins ago

வலைஞர் பக்கம்

31 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

49 mins ago

மேலும்