தட்டுத் தடுமாறிச் செல்லும் வாகன ஓட்டிகள்; புதுவையில் போக்குவரத்துக்கு பயனற்ற சாலைகள் செப்பனிடாததற்கு காரணம் என்ன? - பொதுப் பணித்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர், புரெவி புயல் காரணமாக பொழிந்த கனமழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறிச் செல்கின்றனர். பழுதடைந்த சாலைகளால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.

பழுதான சாலைகளை சீரமைக்கக் கோரி பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரசு கண்டுகொள்ளவில்லை. அரசின் இந்த மெத்தனப்போக்கு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் ரூ.79.40 கோடிக்கு சாலைகளை அமைக்க திட்டமிட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த விலை குறைப்பால் ஒப்பந்தாரர்கள் யாரும் பணியை எடுத்துச் செய்ய முன்வரவில்லை என்று பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘‘கடந்தாண்டில் 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் 25 சதவீத விலைப்புள்ளி குறைவு காரணமாக ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. இதனால் சாலைகளை செப்பனிட இயலாமல் தவித்து வருகிறோம்’‘ என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

அகில இந்திய கட்டுநர் சங்க புதுச்சேரி கிளையின் நிர்வாகிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, ‘‘சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளி தமிழகம் மற்றும் மத்திய அரசை விட புதுச்சேரியில் ஏற்கெனவே குறைவானதாக இருக்கிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்த விலையை மேலும் 25 சதவீதத்துக்கு அரசு குறைத்துள்ளது. அதன்படி, சாலைக்குப் போடப்படும் பிட்டுமெனஸ் மெக்கார்டம் ரூ.5,590 லிருந்து ரூ.4,192 ஆகவும், பிட்டுமெனஸ் கான்கிரீட் ரூ.7,403 லிருந்து ரூ.5,552 ஆகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு விலை குறைப்புக்கு அரசின் உயர்மட்ட அதிகாரிகளே காரணம்.

தார், ஜல்லி விலை, எரிபொருள் செலவு, ஆள்கூலி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் சாலை அமைப்பதற்கான விலைப்புள்ளியை உயர்த்தி வழங்கும் வரை புதுச்சேரியில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வது சந்தேகம்தான்’’ என்கின்றனர்.

ஆனால், இந்த நடப்பு சிக்கல்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் அரசு இயங்கி வருகிறது. புதுச்சேரி மக்களோ பெரு மழைக்குப் பிறகு சாலைகளில் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்