முழுமையான பரிசோதனை தரவுகள் பெறாமல் கரோனா தடுப்பூசிக்கு அவசரப்படுவது ஏன்?- சிபிஎம் கேள்வி

By செய்திப்பிரிவு

முழுமையான பரிசோதனை தரவுகள் பெறாமல் கரோனா தடுப்பூசிக்கு அவசரப்படுவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா தடுப்பூசி முதல்கட்டமாக ஜனவரி 16-ம் தேதி நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்திற்கு சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5.36 லட்சம் வந்துள்ளது எனவும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரோனா நோய் தடுப்புக்கான தடுப்பூசிகள் கண்டுபிடித்து முழுமையாக மக்களுக்கு செலுத்தி நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

கரோனா தடுப்பூசிகள் தயாரிப்பில், தடுப்பூசிக்கு நோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதா, இதனால் உடல்ரீதியான பாதிப்புகள் வேறு ஏதேனும் ஏற்படுமா, பக்க விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையெல்லாம் தடுப்பூசி தயாரிப்பின் போது மூன்று கட்ட பரிசோதனைகளை நடத்திய பின்னரே தடுப்பூசியின் ஆற்றல் தொடர்பான விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல. மக்கள் மத்தியில் அச்சம், பதற்றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. கொரோனா நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள சூழ்நிலையில் முழுமையான பரிசோதனை தரவுகள் வெளிவந்த பிறகு தடுப்பூசி செலுத்துவதே மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முன்களப் பணியாளர்களுக்கு முதன்மை அளித்து தடுப்பூசி செலுத்துவது வரவேற்புக்குரியது. பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி கோவேக்சின் உற்பத்தி தொடக்க நிலையிலேயே உள்ளது என தெரிகிறது. மூன்றாம் கட்ட தரவுகளும், செயல்திறனும் உறுதிப்படுத்தப்படுவதை தொடர்ந்தே உற்பத்தியை முழுமையாக முன்னெடுக்க முடியும்.

எனவே, தடுப்பூசி தயாரித்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் மக்கள் அச்சத்தை அகற்றும் வகையில் மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகளையும், அதன் செயல்திறனையும் முழுமையாக வெளியிட வேண்டுமெனவும், இந்திய மருத்துவ கவுன்சில் கரோனா தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேற்கண்டபடி கரோனா தடுப்பூசிகளின் செயலாற்றலையும், பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்து அனைத்து மக்களுக்கும் இலவசமாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 mins ago

சினிமா

56 mins ago

வலைஞர் பக்கம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்