இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற உயர்கல்வி செயலருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்; உடனடியாக மாற்ற வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்ற உயர்கல்வி செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜன. 02) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்க முயன்றதற்காக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா-வுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. அபூர்வா புகுத்த முயன்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் இந்த சதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பாமக இந்த நடவடிக்கையை வரவேற்கிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை 8-ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழக அரசு பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு துறையும் ஓர் அலகாக கருதப்பட்டு, அதற்குள் 69% இடஒதுக்கீடு 200 புள்ளி ரோஸ்டர் முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆள் தேர்வு அறிவிக்கையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தான் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றுவதற்கு ஆணை பிறப்பித்திருந்தார். இது தவறு; சமூகநீதியை சீரழிக்கும் செயல் என கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அறிக்கை வாயிலாக கண்டித்திருந்தேன்.

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் போது ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாகக் கருதி தான் 69% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஆகும். மத்தியப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓர் அலகாகக் கருதி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ஆணையிட்டிருந்தது.

ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால் மாநில அரசின் கொள்கை தான் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல், பாரதிதாசன் பல்கலைக்கழக பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையை கடைப்பிடிக்க ஆணையிட்டது பெருந்தவறு ஆகும்.

முதல்முறை நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பேராசிரியர் நியமன நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசைப் பின்பற்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஒரே அலகாகக் கருதி பேராசிரியர்களை நியமிக்க கடந்த மே 28-ம் தேதி அபூர்வா மீண்டும் ஆணையிட்டார். அதையும் கடுமையாக கண்டித்ததுடன், பேராசிரியர் நியமனத்தை நிறுத்தி வைக்கும்படியும் வலியுறுத்தினேன்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திருச்சி பாலமுருகன் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி, 'திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மத்தியப் பல்கலைக்கழகம் அல்ல. அது மத்திய அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை. அது மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால் ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதித் தான் பணி நியமனங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், உயர்கல்வித்துறை செயலர் தமது மனதை செலுத்தாமல், தொழில்முறை அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார். அனைத்திந்திய பணிகளுக்கான நடத்தை விதிகளை அவர் கடைப்பிடிக்கவில்லை. எனவே, அவர் உயர்கல்வித்துறை செயலாளராக தொடர்வதற்கு தகுதியானவர் தானா? என்பதை உரிய அதிகாரம் கொண்ட அதிகாரி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓர் அலகாகக் கருத வேண்டுமா? அல்லது ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாகக் கருத வேண்டுமா? என்பது கொள்கை முடிவு ஆகும். கொள்கை முடிவுகளை உயர்கல்வித்துறை செயலாளர் போன்ற அதிகாரிகள் எடுக்க முடியாது; முதல்வர், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய குழு தான் எடுக்க வேண்டும். ஆனால், உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா யாருடனும், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், சமூகநீதி சார்ந்த அரசின் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றால், அது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் செயல் ஆகும். இது உயர் நீதிமன்றம் கூறியிருப்பதைப் போன்று சட்டத்தையும், விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் மதிக்காத போக்கு ஆகும். இத்தகையவர்கள் உயர்கல்வி செயலாளராக நீடிக்கக் கூடாது என்பது சரியே.

எனவே, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு சமூகநீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவை உயர்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து அரசு நீக்க வேண்டும்.

சமூகநீதிக்கு எதிரான அந்த அதிகாரியை தமிழ்நாட்டில் எங்கும் பணியமர்த்தாமல் மத்தியப் பணிக்கு அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது, ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாக கருதும் நடைமுறையே தொடரும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்